முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா? - Sri Lanka Muslim

முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா?

Contributors

ஜெய்லானி, முஹுது மஹா விகாரை போன்ற இடங்களை, தான் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுர கூட்டத்தில் பேசினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் – முஹுதுமஹா விகாரையை தான் கைப்பற்றி விட்டதாக கூறுகிறார். இதில் யார் கைப்பற்றியதாக கூறுவது உண்மை என்பதே எங்களின் கேள்வியாக இருக்கிறது என ஐ.ம.சக்தியின் தொழிற்சங்க தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

சமகால அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அம்பாறையில் ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்த முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு, கல்முனை தனியார் மண்டபம் ஒன்றில் – ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி எம். எஸ். அப்துல் றஸாக் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முஜிபுர் ரஹ்மான் இதனைக் கூறினார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்;

“மக்களின் வாக்குகளை பெற்று பணம் உழைப்பதற்கு யாரையும் அனுமதிக்க முடியாது. பஸிலின் அறையில் டீல் பேசிக்கொண்டு சொகுசாக வாழ்வது கூடாது. பல உண்மைகளை நாங்கள் அறிந்துவைத்துள்ளோம்” எனவும் குறிப்பிட்டார்.

”ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த காலங்களில் வாக்கு சரியக் காரணம் பிழையான தீர்மானங்களேயாகும். இதனை அக்கட்சியின் தலைவர் ரணிலும் ஏற்றுக்கொள்வார். அதனால்தான் புதிய சிந்தனையுடன், புதிய கட்சியை புதிய தலைமையுடன் உருவாக்கியுள்ளோம்.

இனங்களுக்கான, மாவட்டங்களுக்கான கட்சிகள் நமது நாட்டில் நிறைய இருக்கிறது. அதில் சிலர் எங்களுடனும் பங்காளிகளாக இருக்கிறார்கள். இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த நாடுமுழுவதிலும் பணியாற்றி வருகிறோம்.

எல்லா தேர்தல்களிலும் தனித்துவமாக ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும். தேர்தல் நேரங்களில் கூட்டணி அமைப்பது வழமை. இருந்தாலும் எந்தநிலையிலும் தனித்துவ அடையாளத்தை இழக்க மாட்டோம். கடந்த காலங்களில் விட்ட தவறுகளில் நிறைய பாடம் கற்றுள்ளோம். இதுவிடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் நிறைய அனுபவங்களை பெற்றுள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அல்லது மாகாண சபை தேர்தல் எதுவாக இருந்தாலும் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும்.

கல்முனைப் பிரதேசத்தில் பல கட்சிகளுக்கும் வாக்களிக்கும் மக்கள் இருக்கிறார்கள். இப்போது இனக்கட்சிகள் தேவையில்லை எனும் நிலைக்கு மக்கள் வந்துள்ளதுடன் தேசிய கட்சிகளை ஏற்க தயாராகி விட்டர்கள். எல்லா இன மக்களுக்கும் பொருத்தமான கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி இருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் 02 வருடங்களை மட்டுமே கடந்துள்ளது. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுத்து விட்டார்கள். ஜனநாயக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இந்த அரசாங்கம் தவறிழைத்து கொண்டிருக்கிறது. புலனாய்வு பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினால் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்கிறது. நீதி கேட்டு குரல்கொடுத்தால் கைது செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

சஹ்ரானின் தாக்குதலில் பாதிக்கப்பட்டது கிறிஸ்தவ சகோதரர்கள் மட்டுமல்ல முஸ்லிங்களும் தான். அந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டறிய வேண்டும். அந்த தாக்குதலின் உண்மை நிலையை கேட்டறியும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. முஸ்லிங்களில் 99 சதவீதமானவர்கள் இந்த ஈனச்செயலுக்கு எதிரானவர்கள்.

கல்வியறிவற்ற ஸஹ்ரானுக்கும் இந்த தாக்குதலுக்கும் பின்னனியில் இருப்போர் யார்? அவர்களை பயிற்றுவித்தவர்கள் யார்? அவர்களுக்கு மருந்துப்பொருட்களை வழங்கியது யார்? என்பதை தீவிரமாக ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும். இது தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையை கேட்டால் முழுமையாக தருகிறார்கள் இல்லை. நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை மட்டும் கூறி சிறையில் அடைக்கிறார்கள். அப்படி அடைக்கப்பட்ட றிசாத், ஆசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற பலருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த அரசாங்கத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள். பொருளாதாரம் கூட அடிமட்டத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி விஸ்தரிப்பு நடவடிக்கைகளை நாம் செய்யவேண்டும். அப்போதுதான் நமக்கான தனித்துவமான உள்ளுராட்சி மன்ற, மாகாண, நாடாளுமன்ற பிரதிநிதிகளை வென்றெடுக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

 

நூருள் ஹுதா உமர்

Web Design by Srilanka Muslims Web Team