மு. கா பணம் காய்க்கும் மரம் - அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் விசேட பேட்டி » Sri Lanka Muslim

மு. கா பணம் காய்க்கும் மரம் – அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் விசேட பேட்டி

azzoor

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மு. கா பணம் காய்க்கும் மரம், கிழக்கு
முஸ்லிம்களுக்கு சரியான தலைமை இல்லை!

– ரி. தர்மேந்திரன் –


ஸ்ரீலங்கா முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்களில் முக்கியமான ஒருவரான வேதாந்தி சேகு இஸ்ஸடீனின் புதல்வரும், கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் புதிய தலைவருமான அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன் எமக்கு வழங்கிய பேட்டியில் முஸ்லிம் காங்கிரஸ் பணம் காய்க்கும் மரமாக மாறி உள்ளது என்றும் கிழக்கு முஸ்லிம்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லாது உள்ளது என்றும் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- உங்களை பற்றி கூறுங்கள்?

பதில்:- கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தந்தைக்கும், வட மாகாணத்தை சேர்ந்த தாய்க்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று என்கிற ஊரில் பிறந்தவன் நான். அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்று தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தேன். பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவனாக சேர்ந்து அ்ங்கேயே எனது பாடசாலை கல்வி முழுவதையும் நிறைவு செய்து கொண்டேன்.

அதன் பின்னர் விமானம் செலுத்துவது தொடர்பான உயர் கல்வியை கற்று தேர்ந்து விமானியாக செயற்படுவதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றேன். அரசியல் விஞ்ஞானத்தில் முதுமாணி பட்டத்தை படித்து சுவிகரித்தேன். தற்பொழுது சட்ட படிப்பை நிறைவு செய்யும் தறுவாயில் உள்ளேன்.

வர்த்தக பின்புலம் எதையும் கொண்டிராத நான் எனது வங்கி தொழிலை இராஜினாமா செய்து விட்டு வர்த்தக முயற்சிகள் பலவற்றிலும் ஈடுபட்டு பல படிப்பினைகளையும், அனுபவங்களையும் அடைந்த நிலையில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் ஸ்தாபனம் ஒன்றை இந்தியாவில் தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகின்றேன்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன?

பதில் :- நான் ரோயல் கல்லூரியில் சேர்வதற்காக கொழும்புக்கு வந்திருந்த கால கட்டத்தில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்று தலைவராக அஷ்ரப்பும், தவிசாளராக எனது தந்தை சேகு இஸ்ஸடீனும், பொருளாளராக வஃபா பாருக்கும் விளங்கினார்கள். இந்நிலையில் இவர்களோடும், இவர்களை போன்ற ஆரம்ப கால முக்கிய தலைவர்களோடும் மிக நெருங்கி பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதே போல அந்த சிறிய வயதிலேயே என்னாலான உடல் உழைப்பு பணிகளையும் கட்சிக்கு செய்து கொடுத்தேன். கட்சி தலைமையகம் அமைந்திருந்த அதே கட்டிடத்தின் 06 ஆவது மாடியிலேயே எங்கள் வீடும் இருந்தது இவற்றுக்கெல்லாம் வாய்ப்பாக அமைந்தது.

முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது மாநாட்டை ஆறாவது மாநாடு என்று பாஷா வில்லாவில் நடாத்தியது முதல் 1992 ஆம் ஆண்டு தவிசாளர் பதவியில் இருந்து எனது தந்தை முறைகேடாக வெளியேற்றப்படுகின்ற வரை முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் எமது குடும்பத்துக்கு மிக நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. கட்சியின் பல விதி முறைகள் மீறப்பட்டு தவிசாளர் பதவியில் இருந்து எனது தந்தை வெளியேற்றப்பட்ட சம்பவமே முஸ்லிம்களின் அரசியல் தடம் மாறி, திசை மாறி செல்வதற்கு போடப்பட்ட பிள்ளையார் சுழி ஆகும்.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பால் உங்கள் தந்தை கட்சியில் இருந்தும், தவிசாளர் பதவியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஹக்கீம் வெளியேறி செல்ல வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்த உங்களுக்கு என்ன அருகதை உள்ளது?

பதில் : எனது தந்தையை பதவி ஆசை கண்ணை மறைத்ததால் முறை தவறி வெளியேற்றியது தவறு என்கிற குற்ற உணர்வு அஷ்ரப்புக்கு என்றுமே இருந்து வந்தது. இதனால்தான் எனது தந்தையை கட்சிக்குள் மீண்டும் எடுப்பதற்கு பேரார்வம் காட்டி அவ்விருப்பத்தை பலரிடமும் பல முறை வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டும் அல்லாமல் சம்மாந்துறையில் இடம்பெற்ற பொது கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக இவ்விருப்பத்தை தெரிவித்து இருந்தார். இவரின் இந்த உரையின் நாடா அண்மையில் பேஸ்புக் சமூக இணைப்பு தளத்தில் உலா வந்து அதீத பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் விடுதலை வேட்கைக்காக பல உயிர் தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி தடம் புரண்டு பணம் காய்க்கும் மரமாக வளர்ந்து நின்றதில் மனம் நொந்ததால் அதில் மீண்டும் இணையும் எண்ணம் எனது தந்தைக்கு இருக்கவில்லை.

நாம் பாடுபட்டு வளர்த்த கட்சியை வைத்து அவர்கள் சம்பாதித்து சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்து அருவருப்பு அடைந்து விலகியே இருந்தோம்.

தற்போது நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. இவர்கள் எமது சமூகத்தை பல சந்தர்ப்பங்களில் விற்றும், காட்டிக் கொடுத்தும் சம்பாதிக்க ஆரம்பித்த விடயங்கள் பகிரங்கமாக தொடங்கியதில் இருந்து நாம் இவர்களுக்கு எதிராக போராட தொடங்கி உள்ளோம்.

கிழக்கு மக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று கொண்டே கிழக்கை புறக்கணிக்கின்றனர். கிழக்குக்கு கிடைக்க வேண்டிய அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் பதவியை கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர். கிழக்கை தாரை வார்த்து கொடுப்பதற்கு பேரம் பேசுகின்றனர். இவற்றை தட்டி கேட்பதற்கு உண்மையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்கிற அருகதை ஒன்றே போதுமானது.

கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து வெளியே போடப்பட்ட ஹசன் அலியின் பிரச்சினையை கிழக்கின் எழுச்சி கையில் எடுத்து செயற்பட்டது போன்ற ஒரு தோற்றப்பாடு நிலவியதே? அவர் உங்கள் உறவினர் என்பதாலா நீங்கள் அவர் விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டினீர்கள்?

பதில்:- முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கிழக்குக்கு வெளியே உள்ள நிலைமையில் கட்சியில் மீதம் இருக்கின்ற அதிகாரம் உள்ள ஒரே ஒரு பதவியான செயலாளர் நாயகம் பதவி கிழக்குக்கு உள்ளே இருக்க வேண்டும். இப்பதவிக்கு மிக பொருத்தமானவராக ஹசன் அலியை தவிர வேறு எவரையும் நாம் மு. கா உயர்பீடத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. முஸ்லிம் தனித்துவ அரசியலில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அனுபவப்பட்டவராகவும், கிழக்கின் காணி பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்த பிரக்ஞைகளை உடையவராகவும், கட்சிக்கு ஒரு போதும் விரோதமாக செயற்படாதவராகவும், இலஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எடுபடாதவராகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுங்கானவராகவும், இறை அச்சம் உடையவராகவும் உள்ள ஹசன் அலியை ஆதரிக்க நாம் எடுத்த முடிவு சமுதாய நலனை மாத்திரமே முன்னிறுத்தியது ஆகும்.

இவ்வகையில்தான் கிழக்கின் எழுச்சியின் தலைமைத்துவ சபையில் இவரை ஆதரிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை எடுப்பதில் எனது பங்களிப்பு சற்று அதிகமாகவே இருந்தது. கிழக்கின் எழுச்சி இவரை ஆதரிக்க எடுத்த தீர்மானம் மிகவும் சரியானதே என்பதை எதிர்கால தேர்தல்கள் உணர்த்தும் என்று விசுவாசிக்கின்றோம்.

கேள்வி:- கிழக்கின் எழுச்சி ஸ்தாபகர் வஃபா பாருக் இப்போது வேறு ஒரு கட்சியின் தலைவர் பொறுப்பை எடுத்து உள்ளாரே?

பதில்:- ஆம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை கிழக்குக்கு வேண்டும் என்று நாம் கோரினோம். அது கிட்டாதவிடத்து கிழக்கு மற்றும் வடக்கு ஆளுமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக இயங்க வேண்டும் என்று கோரி அனைத்து தலைவர்களிடமும் பேசினோம். அது இறைவனின் அருளால் கை கூடி வருகின்றது.

கிழக்கின் எழுச்சி ஒரு அரசியல் கட்சி அல்ல என்பதால் பிரதிநிதித்துவ அரசியலுக்கு வர மாட்டார் என்று அறிவித்து இருந்த வபா பாரூக் இப்போது ஒரு புதிய கட்சியை வழி நடத்துகின்றார். அக்கட்சி ஊடாக அவரின் சிந்தனைகளை முன்னெடுப்பதில் ஆர்வமாக உள்ளார். உருவாக உள்ள முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் அவரின் கட்சியும் இணைவது மிகவும் உசிதமானதாக இருக்கும்.

நான் இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டி உள்ளது. கிழக்கின் எழுச்சி என்பது ஒரு சிந்தனைதான். எமது சிந்தனைகளை ஏற்று கொண்டவர்கள் பல கட்சிகளிலும் இருக்கின்றார்கள். இதை அமைப்பு ரீதியாக வளர்த்தெடுப்பதில் நாம் அக்கறை காட்டவில்லையாயினும் எமது சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் குறுகிய காலத்தில் நாம் வெற்றி அடைந்து உள்ளோம்.

கேள்வி:- பாதுகாப்பமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை கிழக்கின் எழுச்சி சார்பாக நீங்கள் சந்தித்து பேசியதாக கூறப்படுகின்றது. இதன் இரகசியம் என்ன?

பதில்:- அவரை மட்டும் அல்ல பல தலைவர்களையும் நாம் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளோம். அந்த வகையில் கோத்தாபய ராஜபக்ஸவுடன் மேற்கொண்ட சந்திப்பும் முக்கியமானது.

குற்றம் சாட்டும் வகையிலான எமது பல கேள்விகளுக்கும் அவர் பொறுமையாக பதிலளித்தார். சுமார் இரண்டு மணி நேரங்களை எமக்காக ஒதுக்கி பல விளக்கங்களை தந்தார். முக்கியமாக பொதுபலசேனாவின் பிரச்சினையில் அவர் நடவடிக்கை எடுக்காததை பற்றி நாம் குற்றம் சுமத்தியபோது முஸ்லிம் அமைச்சர்கள் ஒற்றுமையாக ஒரே குரலில் அழுத்தம் கொடுத்திருப்பார்களானால் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருக்க முடியும் என்றும் முஸ்லிம் அமைச்சர்கள் உண்மையான அக்கறையுடன் செயற்பட்டு இருக்கவில்லை என்றும் எடுத்து சொல்லினார். அமைச்சரவை கூட்டங்களில் ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தடுத்து வந்தது முஸ்லிம் அமைச்சர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தபோதிலும் அவர்கள் இதை முஸ்லிம் மக்களுக்கு சொல்லவில்லை என்று சுட்டி காட்டியதோடு இன்றும் அதே அமைச்சருடன் அமைச்சரவையில் இருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார். அரசியல் தீர்வு முயற்சிகள், யுத்தத்துக்கு பின்னரான நகர அபிவிருத்தி போன்ற பல முக்கியமான விடயங்களையும் பரஸ்பரம் பேசினோம்.

கேள்வி:- முஸ்லிம் அரசியலை பொறுத்த வரை எத்தனையோ ஜாம்பவான்கள் உள்ளனர். இவர்களிலும் அநேகர் கிழக்கை சேர்ந்தவர்கள். இவர்களுடன் ஒப்பிடுகின்றபோது ஒரு சிறிய புள்ளியான உங்களால் அரசியலில் சாதிக்க முடியும் என்று எவ்வாறு நம்புகின்றீர்கள்?

பதில்:- இத்தனை ஜாம்பவான்கள் இருப்பினும்கூட கிழக்கு முஸ்லிம்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லாத வெற்றிடம் ஒன்று இருக்கவே செய்கின்றது. இது சாதாரண மக்களாலும் இன்று உணரப்பட தொடங்கி விட்டது. கிழக்கு முஸ்லிம்களின் தேவையை உணர்ந்து அன்று தலைமை வகிக்க முன்வந்திருந்தவர்கள் பெரிய புள்ளிகளாக இருந்திருக்கவில்லை. ஆனால் அதிகாரத்திலும், பணத்திலும் பெரிய புள்ளிகளாக இருந்தவர்களை இவர்களுக்காக நிராகரித்து இவர்களை அங்கீகரித்த வரலாற்றை உடையவர்கள் கிழக்கு முஸ்லிம்கள். அதே இரத்தம் இந்த தலைமுறையிலும் ஓடி கொண்டிருக்கவே செய்கின்றது. அரசியலில் பெரிதாக சாதிக்க வேண்டும், பெரிய பதவிகளை அடைய வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசைகள் இல்லை. ஆனாலும் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நெருப்பு மட்டும் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருக்கின்றது. எனது தூய எண்ணத்தை இறைவன் வெற்றி அடைய செய்வான் என்கிற நம்பிக்கை உள்ளது.

கேள்வி:- உங்கள் அரசியல் பிரவேசத்திலும், செயற்பாட்டிலும் தந்தையின் பங்கும், பங்களிப்பும் என்ன..?

பதில் :- ஏகலைவனுக்கும் துரோணாச்சாரியருக்குமான உறவே அரசியலில் எனக்கும், அவருக்கும் இடையில் உள்ளது. அவரின் ஆரம்ப கால அரசியலில் கவரப்பட்ட பலரில் நானும் ஒருவன். அவர் ஒரு நெருப்பு. அதனால் எட்ட இருந்து ஏராளமான விடயங்களை கற்று கொண்டேன். அவரின் பிந்திய அரசியலில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை.

கேள்வி:- உங்களை போன்ற இளையோர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்:- நீங்கள் காணும் கனவுகளுக்கு தேவையான தகைமைகளை வளர்த்து கொள்ளுங்கள். கனவுகள் நிஜமாக நேருகின்றபோது, நீங்கள் அவற்றுக்கு தகுதி அற்றவர்களாக இருத்தல் கூடாது. மற்றையது பொறுமையாய் இருங்கள். உங்களது நேரம் நிச்சயம் வரும். பொறுமை இழந்து பிழையான முடிவுகளை எடுத்து தூர போய் விடாதீர்கள், ஏனெனில் நேரம் வந்து விட்டால் நீங்கள் திரும்பி வர முடியாத தூரத்தில் இருப்பீர்கள்.

Web Design by The Design Lanka