"மூன்றாண்டுகள் கடந்தும் ஈஸ்டர் தாக்குதல் ஈனச்செயலாளர்கள் தண்டிக்கப்படவில்லை" - அசாத் சாலி! - Sri Lanka Muslim

“மூன்றாண்டுகள் கடந்தும் ஈஸ்டர் தாக்குதல் ஈனச்செயலாளர்கள் தண்டிக்கப்படவில்லை” – அசாத் சாலி!

Contributors

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு மூன்றாண்டுகள் முடிந்துள்ள நிலையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாதும், நிரபராதிகள் அநியாயமாக தண்டிக்கப்பட்டும் உள்ளமை கவலையளிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (17) கிறிஸ்தவ சகோதரர்கள் புனித உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடும் சூழலை முன்னிட்டே, அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

“சுதந்திரமடைந்துள்ள இந்த நாட்டில், மதச் சுதந்திரம் கூட பறிக்கப்பட்ட ஒரு சோக சம்பவமாகவே ஈஸ்டர் தாக்குதலை நான் பார்க்கிறேன். இவ்வாறான ஒரு புனித நாளில்தான் அந்தப் பயங்கரம் அரங்கேற்றப்பட்டது.

கிறிஸ்தவ சகோதரர்கள் வழிபாட்டு  நம்பிக்கையில் மூழ்கியிருந்த வேளையில், குற்றுயிராகவும், நிர்க்கதியாகவும் ஆக்கப்பட்டு, அவர்களது உயிர்களும் காவுகொள்ளப்பட்ட இந்த தாக்குதல், வரலாற்று வடுக்களிலிருந்து மாறப்போவதுமில்லை.

இந்தப்பயங்கரம், அப்பாவி மற்றும் சிவில் சமூகங்களின் ஆறுதல், அமைதியையும் இல்லாமலாக்கியுள்ளது.

எந்த நோக்கிற்காக இது செய்யப்பட்டுள்ளது என்பதை, இப்போதுதான் மக்கள் புரியத் தொடங்கியுள்ளனர். இதன் பின்னணியிலிருந்த தீய சக்திகள், சுதந்திரமாக உலாவுகையில், பழிவாங்கல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

இவையெல்லாம், ஆட்சியதிகாரத்தால் அனைத்தையும் மறைக்க முடியுமென்ற சிலரின் குருட்டு நம்பிக்கைகளாலே செய்யப்பட்டன. ஆனால், எல்லோருக்கும் பொதுவான இறைவன், மக்களது மனச்சாட்சிக்கு முன்னால் இவற்றை நிரூபித்து வருகிறான்.

எனவே, ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளுக்கும் இந்த குற்றவாளிகளை பொதுவௌியில் கொண்டு வருவதற்கான பொறுப்பு உள்ளது என்பதை தேசிய ஐக்கிய முன்னணி ஞாபகமூட்டுகிறது.”

அரசியல் ஆதாயங்களுக்காக, மத நம்பிக்கைகள் கொச்சைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு அநியாயம் என்ன இருக்கிறது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team