மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சிராஸுக்கு ஹக்கீம் பணிப்பு! - Sri Lanka Muslim

மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சிராஸுக்கு ஹக்கீம் பணிப்பு!

Contributors

(செயிட் ஆஷிப்)

சுழற்சிமுறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மாநகர மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபிற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்ற போதே மேயர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தலைவர் பணித்துள்ளதாக மு கா.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிபும் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை கல்முனைக்குடியைச் சேர்ந்த கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமான சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேயரை நியமிக்கும் விடயத்தில் பாரிய சர்ச்சை தோன்றியது. சாய்ந்தமருதில் பாரிய ஆர்ப்பாடங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து சுழற்சிமுறையில் மேயர் பதவியை பகிர்ந்து வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தீர்மானித்தது.

இதன் பிரகாரம் முதல் இரு வருடங்களுக்கு சிராஸ் மீராசாஹிபும் அடுத்த இரு வருடங்களுக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் மேயராக பதவி வகிப்பார்கள் என கட்சி அறிவித்தது. இதனால் அப்போது இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது. இந்த தீர்வின் பிரகாரம் சிராஸ் மீராசாஹிப் மேயராக பதவியேற்று இம்மாதம் 10ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team