மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இந்திய அணி முன்னிலை - Sri Lanka Muslim

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக இந்திய அணி முன்னிலை

Contributors

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி, இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இன்றைய நாளின் தொடக்கத்திலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இந்திய அணி சார்பாக அறிமுக வீரர் றோகித் சர்மாவும், அணித்தலைவர் மகேந்திரசிங் டோணியும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர். 7ஆவது விக்கெட்டுக்காக றோகித் சர்மா, இரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் பிரிக்கப்படாத 198 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக றோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களையும், இரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களையும், மகேந்திரசிங் டோணி 42 ஓட்டங்களையும் பெற்றனர். தனது இறுதிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் சச்சின் டெண்டுல்கர் 10 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஷேன் ஷிலிங்பேர்ட் 4 விக்கெட்டுக்களையும், ரீனோ பெஸ்ற், ஷெல்டன் கொட்டரெல் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இனிங்ஸில் 234 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதன்படி, இந்திய அணி 4 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் 120 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team