யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத சக்திகளே, அழுத்தத்தை பிரயோகின்றது – ஜனாதிபதி » Sri Lanka Muslim

யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத சக்திகளே, அழுத்தத்தை பிரயோகின்றது – ஜனாதிபதி

Contributors

யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத சக்திகளே, இலங்கை மீது பாரிய அழுத்தத்தை பிரயோகிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அபுதாபிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபூர் ரெக்னார் கிறீம்சனுடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்த கருத்தினை தெரிவித்தார்.

மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளதாக ஐஸ்லாந்து ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் கால அவகாசம் தேவைப்படுகின்றது எனவும், இதன்பொருட்டு கால வரையறையை நிர்ணயிப்பது பயனுடையதாக அமையாது என்றும் ஐஸ்லாந்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், இலங்கை அடைந்துள்ள அபிவிருத்திகளின் முன்னேற்றம் குறித்து ஐஸ்லாந்து ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உப ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடனும், துபாய் ஆட்சியாளரான ஷேக் மொஹமட் பின் ராஷிட் அல் மக்தூம் உடனும் ஜனாதிபதி இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

துபாய் ஆட்சியாளருடனான பேச்சுவார்த்தையின்போது, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதியிடம் உறுதியளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team