யுவ்ராஜின் அதிரடியால் அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா - Sri Lanka Muslim

யுவ்ராஜின் அதிரடியால் அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா

Contributors

 

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான ஒற்றை டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. யுவ்ராஜ் அதிரடி நிகழ்த்திய இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

சௌரஸ்ரா கிரிக்கெட் சபை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைக் குவித்தது.
அதிரடியாகத் தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, முதலாவது விக்கெட்டுக்காக 4.5 ஓவர்களில் 56 ஓட்டங்களைக் குவித்ததுடன், தொடர்ச்சியாக ஓட்டங்களைக் குவித்தது. விக்கெட்டுக்கள் இழக்கப்பட்ட போதிலும், ஆரொன் ஃபின்ச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரொன் ஃபின்ச் 52 பந்துகளில் 89 ஓட்டங்களையும் அறிமுக வீரர் நிக் மடின்சன் 16 பந்துகளில் 34 ஓட்டங்களையும் கிளென் மக்ஸ்வெல் 13 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக வினய் குமார் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் புவனேஷ்வர்குமார் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டை 12 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, 11.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், அடுத்த 51 பந்துகளில் 102 ஓட்டங்கள் குவிக்கப்பட்டன.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக யுவ்ராஜ் சிங் 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் ஷீகர் தவான் 19 பந்துகளில் 32 ஓட்டங்களையும் விராத் கோலி 22 பந்துகளில் 29 ஓட்டங்களையும் மகேந்திரசிங் டோணி 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக கிளின்ட் மக்காய் 2 விக்கெட்டுக்களையும் நேதன் கோர்ட்டர் நீல், ஷேவியர் டொகேர்ட்டி இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக யுவ்ராஜ் சிங் தெரிவானார்.

Web Design by Srilanka Muslims Web Team