"யூசுப் அல்-கர்ளாவி" என்ற மாமனிதன்! - Sri Lanka Muslim
Contributors

இமாம் யூசுப் அல் – கர்ளாவி அவர்களும் இவ்வுலகை விட்டு அகன்று, நிரந்தர உலகிற்கு சென்று விட்டார்கள்.

மிகச் செல்வாக்குப் பெற்ற அறிஞராக இஸ்லாமிய உலகிலும் அதற்கு வெளியேயும் வாழ்ந்த அவர், தனது 96வது வயதில் எம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். அவனிடமே மீண்டு செல்ல உள்ளோம். அல்லாஹ் அவரது குற்றம் குறைகளை மன்னித்து அவரை ஏற்று உயர்ந்த சுவனத்தை கொடுப்பானாக.

எழுத்தால் சாதனைகள் பலவற்றைப் படைத்த அந்தக் கர்ளாவிப் பேனா முற்றாக நின்று போய்விட்டது என்பது மனதிற்கு பெரும் பாரத்தையும் கவலையையும் தருகிறது.

எனினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் 100 பாகங்களாக வெளியிட உள்ளார்கள் என்ற செய்தி கர்ளாவியின் நாம் வாசிக்காத எழுத்துக்கள் இன்னும் உள்ளன என்ற எண்ணத்தை தந்து ஒரு சின்ன ஆறுதல் பெற வைக்கிறது.

கர்ளாவி பற்றி எழுத முன்னர், அவரது வாழ்வை மாற்றிய கதையை கீழே தருவோம்:

கர்ளாவி ஒரு வறுமைப்பட்ட குடும்பத்தில் பிறந்தார். தந்தை இறந்ததன் பிறகு தந்தையின் சகோதரரிடத்தில் அவர் வளர்ந்தார்.

உயர்தரப் பிரிவில் அவர் படித்ததன் பின்னர் அவரது தந்தையின் சகோதரர் இனி என்னால் செலவழிக்க முடியாது. வயலுக்கு என்னோடு வேலைக்கு வா எனக் கூறி வயலுக்கு அழைத்துச் செல்ல துவங்கினார்.

அவ்வாறு ஒரு நாள் வயலில் வேலை செய்து விட்டு பகல் உணவுக்காக உட்கார்ந்திருந்த போது பக்கத்தால் ஒரு ஷேய்க் சென்றார். அவரை வாருங்கள் சாப்பிட்டுச் செல்லலாம் என கரளாவியின் குடும்பத்தார் அழைத்தார்கள்.

அவரும் வந்தமர்ந்து உண்டதன் பின்னர் கர்ளாவியைப் பார்த்து அருகில் அழைத்து நீ குர்ஆன் ஓதி இருக்கிறாயா எனக் கேட்டுவிட்டு குர்ஆனின் சில பகுதிகளை ஓதுமாறு கேட்டிருக்கிறார்.

கர்ளாவி ஓதக்கேட்டிருந்த ஷேய்க் கர்ளாவியின் தந்தையின் சகோதரரை விளித்து இவன் என்ன செய்கிறான் எனக் கேட்க, தொடர்ந்து படிப்பிக்க முடியாமையால் இவ்வாறு தொழிலுக்கு அழைத்து வந்தேன் என்றார்.

இல்லை! இல்லை! இவனை நீ கல்வி கற்க விட வேண்டும். அவனுக்கு ஒரு பெரிய எதிர்காலம் உள்ளது என்று ஷெய்க் சொல்லிச் சென்றார்.

கர்ளாவியின் சாச்சாவும் அவரைப் படிப்பித்தார்.

இதுதான் யாருக்கும் அறிமுகமற்று விவசாயியாக வாழ இருந்த கர்ளாவி மாபெரும் அறிஞராகிய கதை.

இது கர்ளாவி அவரது சுயசரிதை நூலான இப்னுல் கர்யா வல் குத்தாப் என்ற நூலில் குறிப்பிடும் சம்பவம் ‘‘நான் இதனை ஓர் அற்புதமாகக் கூறவில்லை. ஆனால் அந்த ஷெய்கை நான் அதன் பிறகு பார்க்கவே இல்லை” என கர்ளாவி தொடர்ந்து கூறுகிறார்.

நான் கண்ட இமாம் கர்ளாவி நான்கு வகையான அறிவாளுமை. அந்த பின்னணியில் நின்று அவர் பெரும் பங்காற்றினார்.

1. இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போராட்டங்களில் கலந்து கொண்டு அது இக்கால பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது என நிறுவிய சிந்தனையாளன்.

இஸ்லாமியத் தீர்வின் தவிர்க்க முடியாத் தன்மை (حتمية الحل الإسلامي) இறை நம்பிக்கையும் வாழ்வும் (الإيمان والحياة) போன்ற நூல்கள் இதற்கு உதாரணங்களாகும்.

2. இஸ்லாமிய சட்டம், சட்ட ஆய்வு முறைமை (உஸூல் அல் பிக்ஹ்), ஸுன்னா, இறை நம்பிக்கை (அகீதா), தஸவ்வுப் போன்ற ஷரீஆ கலைகளில் பல புதிய சிந்தனைகளை முன்வைத்த மிகப்பெரும் ஷரீஅத் துறை நிபுணர்.

3. இஸ்லாமிய எழுச்சி தீவிரம், வன்முறைக்கு சென்று விடக்கூடாது; இறுக்கமும் கடும் போக்கும் கொண்ட சிந்தனைகளில் விழுந்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி எழுதிய இஸ்லாமிய எழுச்சியின் வழிகாட்டி.

கோளாறு எங்கே உள்ளது (أين الخلل) மறுப்புக்கும் தீவிரவாதத்திற்குமிடையே இஸ்லாமிய எழுச்சி (الصحوة الإسلامية بين الجحود والتطرف) போன்ற பல நூல்கள் இதற்கான உதாரணங்களாகும்.

4. கர்ளாவி ஆரம்ப காலத்தில் -இளம் வயதில்- கவிஞர் கர்ளாவி என அழைக்கப்பட்டார். அவ்வாறு -பின்னால் காலப் பிரிவில் அவரிடம் சிந்தனைப் பகுதி மிகைத்து விட்டாலும்- ஒரு இலக்கிய கர்த்தாவாகவும் அவர் இயங்கினார்.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் கவலைகளைச் சுமந்து கண்களில் கண்ணீரோடும் உள்ளத்தில் ஆழ்ந்த வேதனையோடும் பாசத்தோடும் வாழ்ந்த, சிந்தனையோடு மட்டும் நின்று விடாத, எந்த இயக்க கட்டமைப்புக்குள்ளும் உட்படாத சமூக வழிகாட்டி அவர்.

சிறுபான்மை முஸ்லிம்களை அவர் மறக்கவில்லை. சிறுபான்மை ஒருபோதும் பெரும்பான்மை போன்று வாழவோ இயங்கவோ கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

எனவே அதற்கான “பிக்ஹ் அல் அகல்லிய்யாத்” (சிறுபான்மைக்கான சிந்தனை முறைமை) என்ற கோட்பாட்டு ஒழுங்கொன்றை ஆரம்பித்து வைத்தார்.

இந்த மாபெரும் மனிதரை என்ன சொல்லி வழி அனுப்புவது என்று எனக்குத் தெரியவில்லை.

அவர் வார்த்தைகளுனுள்ளே அடைபடுகிறாரில்லை. இறைவா இந்த சமூகத்திற்கான அவரது உழைப்புக்கான நற்கூலியை வழங்குவாயாக. நாம் எல்லாம் உன் சன்னிதானத்தில் சந்திக்க அருள் புரிவாயாக.

உங்களது எழுத்துக்கள் மூலமான
உங்களது எளிய மாணவன்
மன்ஸூர்.

Shaik Usthaz Mansoor

Web Design by Srilanka Muslims Web Team