யேமன் மீதான சவூதி அரேபிய தாக்குதல்கள் தொடரும் - சவூதி தூதர் - Sri Lanka Muslim

யேமன் மீதான சவூதி அரேபிய தாக்குதல்கள் தொடரும் – சவூதி தூதர்

Contributors
author image

World News Editorial Team

சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் யேமன் மீது நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக அமெரிக்காவுக்கான சவூதி தூதர் தெரிவித்தார்.
யேமனில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி தீவிரவாதிகள் அரசுப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் சனா அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் ஹாதி தெற்குப் பகுதியில் உள்ள துறைமுக நகருக்குத் தப்பிச் சென்றார். பின்னர் அங்கிருந்து வெளியேறி அவர் சவூதியில் தஞ்சம் புகுந்தார்.
இந்த நிலையில், சவூதி தலைமையில் 10 நாடுகளின் கூட்டுப் படை யேமன் மீது கடந்த 3 வாரங்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்காவுக்கான சவூதி தூதர் ஆதில் அல்-ஜுபேர் வாஷிங்டனில் புதன்கிழமை தெரிவித்ததாவது:
சவூதி தலைமையிலான தாக்குதலைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராகப் போராடி வருபவர்களின் பலம் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கிறது. அவர்களின் படைத் தளபதிகள், வீரர்கள் பலர் யேமன் அரசுப் படைத் தரப்புக்கு மாறியிருக்கின்றனர். கூட்டுப் படையினர் யேமன் மீது நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
சவூதி தாக்குதலின் தீவிரம் அதிகரிக்கும்போது, கிளர்ச்சிப் படையின் வீரர்களுக்கு மேலும் நெருக்குதல் ஏற்படும்.
வான்வழித் தாக்குதல், சவூதி கப்பல்களிலிருந்து குண்டு வீச்சு, சிறப்புத் தரைப்படையினரின் தாக்குதல் என யேமனில் கூட்டுப் படையின் செயல்பாடுகள் மேலும் தீவிரமடையும். இந்த தாக்குதலின் லட்சியம் நிறைவேறும் வரை, கூட்டுப் படையினரின் தாக்குதல் தொடரும். இது போன்ற விவகாரங்களில் பாதி நடவடிக்கையோடு எதையும் நிறுத்திக் கொள்ள முடியாது.
சவூதி நடவடிக்கைகளுக்குப் பிறகு, கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானிடமிருந்து கிடைத்து வந்த ஆயுத உதவி நின்றுவிட்டதாகத் தெரிகிறது.
யேமன் வான்வெளி முழுவதும் சவூதியின் கட்டுப்பாட்டில் உள்ளது. யேமனை நோக்கி வரும் அனைத்துக் கப்பல்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. யேமனில் ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவு அளிக்கும் வகையில், ஆயுதங்கள் வழங்குவதை ஈரான் நிறுத்த வேண்டும். அனைத்து மக்களுக்கும் ஆதரவளித்து, அந்த நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மை, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
யேமனின் ஐ.நா. தூதர் ராஜிநாமா
யேமனுக்கான ஐ.நா. தூதர் ஜமால் பினோமார் ராஜிநாமா செய்ததாக ஐ.நா. வியாழக்கிழமை தெரிவித்தது.
யேமன் தலைநகர் சனாவை கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைப்பற்றினர். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் ஹாதி அங்கிருந்து தப்பி ஏடன் நகருக்குச் சென்றார். அந்த நகர் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளானபோது, அவர் நாட்டைவிட்டு வெளியேறி சவூதியில் தஞ்சம் புகுந்தார்.
கடந்த செப்டம்பரிலிருந்தே கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே சமாதானப் பேச்சு நடத்தவும், அமைதி நிலை திரும்பவும் ஐ.நா. தூதர் ஜமால் பினோமார் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அந்த நாட்டின் மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படையினரின் வான்வழித் தாக்குதல் 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. யேமனில் பரவலான முறையில் நடைபெற்று வரும் வன்முறையைத் தவிர்க்கத் தவறிவிட்டதாகக் கூறி, ஐ.நா. தூதர் ஜமால் பினோமார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கிளர்ச்சியாளர்களின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே, ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team