'ராஜபக்ஷ குடும்பத்தை எதிர்த்தவர்கள் இரக்கமற்ற முறையில் மௌனிக்கச் செய்யப்பட்டனர்' - அமெரிக்க செனட் சபை உறுப்பினர்! - Sri Lanka Muslim

‘ராஜபக்ஷ குடும்பத்தை எதிர்த்தவர்கள் இரக்கமற்ற முறையில் மௌனிக்கச் செய்யப்பட்டனர்’ – அமெரிக்க செனட் சபை உறுப்பினர்!

Contributors

ராஜபக்ஷ குடும்பம் இலங்கை மக்களின் ​பணத்தால் செல்வந்தர்களானதுடன், அவர்களை எதிர்த்தவர்கள் இரக்கமற்ற முறையில் மௌனிக்கச் செய்யப்பட்டு, இனங்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் பெட்ரிக் லீஹி தெரிவித்துள்ளார்.

பல வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம், அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவம், முறைகேடுகளின் பின்னர் இலங்கைக்கு இன சகிப்புத் தன்மை, நியாயமான பொருளாதார அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசாங்கமொன்று அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கொள்கையும் இதுவாகவே அமைய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் கீழ் வலுவற்ற நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளை பெறுவதற்காக பரந்த சர்வதேச அணுகலை கோரி பெட்ரிக் லீஹி உள்ளிட்ட 5 செனட் உறுப்பினர்கள், அமெரிக்க செனட் சபையில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளனர்.

பல தசாப்தங்களாக இடம்பெற்ற மோதல், அரசியல் முறைகேடுகள் மற்றும் நிவர்த்திக்கப்படாத முறைகேடுகளின் பின்னர் இலங்கை மக்களும் மிகச்சிறந்த நிலைமையை எதிர்பார்ப்பதாக செனட் சபையின் ஆளுங்கட்சியின் கொறடா டிக் டர்பின் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக, அமைதியான ஜனநாயக முயற்சிகளுடன் அமெரிக்க செனட் சபை முன்நிற்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கையில் நிலவும் பாரிய பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் செயற்பட வேண்டுமென்ற உறுதியான தகவலை இலங்கை மக்கள் வழங்கியுள்ளதாக செனட்டர் கோரி புக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மக்களுடன் தாம் நிற்பதாகவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அமைதியான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team