ரிஷாடுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படும் சமூக பற்று..! » Sri Lanka Muslim

ரிஷாடுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படும் சமூக பற்று..!

Contributors
author image

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

தற்போது அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் சிறையில் வாடுகிறார். தலைவர்கள் சிறை செல்வதொன்றும் புதிதான விடயமல்ல. இது போன்று உலகத்தில் பல்வேறு வரலாறுகள் பதிவாகியுள்ள போதும், இலங்கையில் முஸ்லிம் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பமாக இதனை கோடிடலாம். அவர் கைது செய்யப்பட்டுள்ள விடயமும், அவருக்கு எதிரான வழக்கு தீர்ப்பும் அவரது ஆற்றலையும், சமூக உணர்வையும் தெளிவாக புடம் போட்டுக் காட்டுகிறது.

வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமானது. இன்று அவர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 12 500 நபர்களின் வாக்குரிமையை உறுதி செய்தமைக்காக சிறையில் உள்ளார். ஒரு வாக்கால் நிகழ்ந்த மாற்றங்கள் எத்தனையோ வரலாறுகளில் பதிவாகியிருக்க, 12 500 வாக்குகளை சாதாரணமாக விட முடியாது. இவர்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு வேறு சில அரசியல் வாதிகளுக்கும் உள்ள போதும், அவர்கள் எல்லாம் அவர்களுடைய தேர்தலுக்கு மாத்திரமே வருவார்கள். இது தொடர்பில் பலரும் ஆழமாக அலசியுள்ளதால், இது தொடர்பில் அதிகம் பேசத் தேவையில்லை.

தற்போது அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் காடழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மேன் முறையீடு செய்து அவ் விடயத்தில் நீதி பெறும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இங்கு காடழித்தார் எனும் குற்றச் சாட்டே முன் வைக்கப்படுகிறது. இவ்வாறு கூறும் போது அவர் செய்த நலவுகள் மறைக்கப்படுகின்றன. சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள மனுவில், சுமார் 1500 அகதிகள் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இன்னுமொரு விதத்தில் கூறுவதாக இருந்தால், ” அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் 1500 அகதிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். ” இப்படி சிந்தித்து பாருங்கள், அவர் செய்த சேவையின் ஆழம் புரியும்.

கிழக்கு மாகாணத்திலும் பல இடங்களில் காணிப் பிரச்சினைகள் உள்ளன. இன்று வரை ஒரு ஏக்கர் காணியை கூட எம்மால் மீட்க முடியவில்லை எனும் கசப்பான உண்மையை யாவரும் ஏற்றேயாக வேண்டும். எமது காணிகள் மீட்கப்படவில்லை என்பதற்கு மாறாக, எமது காணிகள் பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட சம்மாந்துறை, கரங்காவட்டையில் எம்மவர்களின் பெயரில் உள்ள காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கின் நிலை இவ்வாறிருக்க, வடக்கில் காடாக காணப்பட்ட இடங்களை சுத்தம் செய்து ( எத்தனையோ சட்டங்களை கடைப்பிடிக்க நேர்ந்திருக்கும்.) மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

காடாக இருந்தமையால் காட்டுக்கும், நாட்டுக்குமிடையிலான எல்லையை கண்டு பிடிப்பதே பெரும் பிரச்சினை. இதனையெல்லாம் மீறி குறியேற்றுவது சிறிய விடயமல்ல. தற்போது காடழித்து குடியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுவது மாத்திரம் 2388 ஏக்கறாகும். அப்படியானால் குடியேற்றப்பட்ட மொத்த பிரதேசமும் எவ்வளவு இருக்கும்? இது ஒரு சாதனை என்பதை யாரும் மறுக்க முடியாது. இவர்களை குடியேற்றம் செய்ய வேண்டியது அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு மாத்திரம் கட்டாயமாக்கப்பட்ட ஒன்றல்ல. ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கும் கடமையான ஒன்றே! அவர்கள் தற்போது ஏற்பட்டுள்ளது போன்ற பிரச்சினை வருமென்று தான், அன்றே ஒதுங்கி நின்றார்களோ தெரியவில்லை. இவர்களைப் போன்று அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீனும் ஒதுங்கி நின்றிருந்தால் இந்த பிரச்சினைகளை எதிர் நோக்கியிருக்க மாட்டார். வீட்டுக்குள் நிம்மதியாக உறங்கியிருப்பார்.

தற்போது அங்கு குடியேற்றப்பட்டுள்ள 1500 மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது பற்றி குரல் கொடுக்க யாராவது உள்ளார்களா? இல்லையல்லவா? எப்போதும் அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் தான் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? அம் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரச தரப்பு பா.உறுப்பினரும் உள்ளார், மு.கா தலைவரும் உள்ளார். இப்படியான சிக்கலான விடயங்களுக்குள் கை வைக்க விரும்பாதவர்கள் வீடுகளுக்குள் நிம்மதியாக உறங்கலாம் தானே! சிக்கலான விடயங்களுக்குள் கை வைத்தமையினாலேயே அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் சிறையில் வாடுகிறார்.

இந்த வழக்கு விசாரணையை அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் 2015 ம் ஆண்டிலிருந்து எதிர்கொண்டுள்ளார். இத்தனை வருடமாக எவ்வளவு பணம், நேரம் விரயமாகியிருக்கும் என்று சிந்தனை செய்துபாருங்கள். அவர் இந்த சமூகத்திற்காக எத்தனை அம்புகளை தன் நெஞ்சில் சுமந்துள்ளார் என்பதை இவற்றை சிந்திப்போரால் அறிய முடியும்.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் தான், இத்தனையும் செய்த அவர் அந் நேரத்தில் மீள் குடியேற்ற அமைச்சராக இருக்கவில்லை என்பதாகும். அவர் குறித்த விடயதானத்தோடு சம்மந்தப்பட்ட எந்த அமைச்சையும் தன்னகத்தே வைத்திருக்காது போனாலும், அத்தனையும் செய்தது அவர் என்ற தோற்றப்பாடே உள்ளது. அப்படியானால், இந்த மக்களை மீள் குடியேற்றுவதில் அவர் எந்தளவு தீவிரமாக இருந்திருப்பார் என்று சிந்தித்து பாருங்கள். தன் மக்களுக்காகவே வாழ்ந்திருக்கின்றார். இந்த தலைவர் எமக்கு தேவையல்லவா?

குறித்த இடம் வனத்துக்கு சொந்தமாக இருந்திருந்தால், அதனை உரிய முறையில் விசாரிக்காது மீள் குடியேற்ற அமைச்சு அகதிகளை மீள் குடியேற்ற அனுமதி வழங்கியிருக்குமா என்ற வினா மாத்திரமே, இதில் எம் பக்கமுள்ள நியாயங்களை புரிந்துகொள்ள போதுமானதாகும்.

Web Design by The Design Lanka