ரூபாவின் பெறுமதி உயர்வில் நீங்கப்போகும் நெருக்கடிகள்! -சுஐப்.எம்.காசிம்-

Read Time:4 Minute, 54 Second

“நாட்டின் நிதி நெருக்கடி நீங்கிப்போக நான்கு வருடங்கள் தேவைப்படும் என்றனர். ஆனால், நானோ எட்டு மாதங்களுக்குள் தீர்வைக் கொண்டுவந்துவிட்டேன்” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெருமிதம் இது. மத்திய வங்கியின் ஆளுநரும் அவரும் இணைந்து நிதிக்கடன் பத்திரத்தில் ஒப்பமிட்ட பின்னர் ஒப்புவித்த வார்த்தைகளே இவை.

நாட்டிலேற்பட்டுள்ள பணவீக்கம், படுகடன் மற்றும் வங்கிகளின் வங்குரோத்துக்களால் மக்களாணையை மக்களே தூக்கி வீசினர். எவருமே பொறுப்பேற்கத் தயங்கிய பதவியை ரணில் முன்வந்து பாரமேற்றார். சர்வதேசத்தில் அவருக்குள்ள செல்வாக்கு இன்று இலங்கையைச் செல்வங்கொழிக்க வைக்கப்போகிறது.

ஒரு நாட்டு நாணயத்தின் சர்வதேசச் சந்தைப் பெறுமதியானது உள்நாட்டு உள்ளீடுகளைப் பொறுத்தே நிர்ணயமாகிறது. அந்நியச்செலாவணி உள்ளீர்ப்பு, பணத்தை மிதக்கவிடல் மற்றும் பணவீக்கம் ஏற்படாமல் பாதுகாத்தல் என்பவைகள்தான் உள்நாட்டு நாணயத்தின் வெளிநாட்டு (டொலர்) பெறுமதியைத் தீர்மானிக்கிறது. இந்நிலையில், நானூறு ரூபாவையும் எட்டவிருந்த ஒரு டொலரின் இலங்கை ரூபா பெறுமதி, இன்று 307 ரூபாவால் குறைந்துவிட்டது. சுற்றுலாத்துறையால் கிடைத்த 436 மில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பு, சர்வதேச உதவிகள் கிடைக்கும் சூழல் கை கூடியமை என்பவற்றாலேயே ரூபாவின் பெறுமதி உயர்கிறது. இதனால், களவாகவும் உண்டியலூடாகவும் நாட்டுக்குள் வந்த டொலர்கள் வெளியே புழக்கத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. வங்கிகளூடாக டொலர்களை அனுப்புவதால் வரவுள்ள விபரீதங்களுக்கு அஞ்சி, களவாக வந்த டொலர்களையும் இப்போது திறைசேரிக்கு வரவைத்துள்ளார் ஜனாதிபதி. டொலரின்றி அரசாங்கம் தவித்தபோது அரிசி, சீனி, பருப்பு, கோதுமை, எரிவாயு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்யத் திண்டாடியபோதெல்லாம் இந்த டொலர்கள் சிலரிடம் பதுங்கியே இருந்தன ஏன்? விலை உயருமென்ற விபரீத விருப்புக்களே!

இந்நிலையை, வேறு யாராலும் ஏற்படுத்தியிருக்க முடியுமா? இதுவே இன்று பேசுபொருள். தென்னிலங்கை அரசியலில் நிலைக்க நினைக்கும் சில சக்திகள், ரூபாவின் பெறுமதி உயர்வதை உளப்பூர்வத்துடன் விரும்பப் போவதும் இல்லை. எல்லாக் காரணங்களையும் சந்தைப்படுத்தி வாக்கு வாங்கியாயிற்று. இனி இந்தக் கட்சிகள், இம்முறை பொருளாதாரப் பின்னடைவைத்தான் போடுகாயாகவும் ஆடுகாயாகவும் அரங்கேற்றவிருந்தன. இதற்குள் சகல காய்களையும் தம்வசப்படுத்தும் வியூகங்களில் ரணில் முனைகிறார்.

இந்த முயற்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிடியிலிருந்தும் ரணிலை விடுவிக்கும். இவ்விடுதலையால், பல கட்சிகளின் ஆளுமைகளும் உடைக்கப்படலாம். இதை பூடகமாக உணர்த்தும் வகையில்தான் ஜனாதிபதியின் அண்மையக் கருத்துக்களும் உள்ளன. முழுமையான அமைச்சரவை மாற்றம் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறார் ரணில். நாட்டை ஸ்திரநிலைக்கு கொண்டுவந்த பின்னர் அமையவுள்ள அமைச்சரவையை வேறு யார் கட்டுப்படுத்துவது?

ஒட்டுமொத்தமாக ஒரே வார்த்தையில் சொல்வதானால் கடன் வழங்கும் நாடுகளென அழைக்கப்படும் “பரிஸ் கிளப்” பச்சைக்கொடி காட்டிற்று. இனியென்ன, நாட்டின் பஞ்சம் போவதுதான் பாக்கி. நல்லது நடக்கட்டும் பிறகு அரசியல் நாடகத்தை யோசிப்போம்.

 

சுஐப்.எம்.காசிம்-

Previous post தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடிதம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது – கையெழுத்திடுவாரா ரணில்?
Next post முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் -37000 எதிர்ப்பு கையொப்பங்கள் அடங்கிய அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு!