வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது - ஹரீஸின் நேர்காணல் - Sri Lanka Muslim

வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது – ஹரீஸின் நேர்காணல்

Contributors
author image

ஊடகப் பிரிவு

வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது. பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் முஸ்லிம் காங்கிரஸிற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துரோகம் இழைத்துள்ளது. முஸ்லிம்களின் அபிலாசைகளை ஒரு போதும் நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. அதற்கான போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் (01.10.2017 இரவு) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இடைக்கால அறிக்கையில் முஸ்லிம் காங்கிரஸினால் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் முன் வைக்கப்படவில்லை. இது விடயத்தில் எங்களது அதிருப்தியை அரசாங்கத்திடம் எமது கட்சி தெரிவித்துள்ளது. இடைக்கால அறிக்கைக்குரிய இறுதி வாசிப்பின் போது முஸ்லிம்களின் அபிலாசைகள் உள்ளக்கப்படாத பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸ் அதனை எதிர்ப்பதற்கும் தயக்கம் காட்டாது.

மேலும், கரையோர மாவட்டம் தரப்பட வேண்டும். இது எமது நீண்ட கால கோரிக்கையாகும். இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படும் பட்சத்தில் வீதிக்கு இறங்கிப் போராடவும் தயங்க மாட்டோம். இடைக்கால அறிக்கை தொடர்பில் எமது கட்சியின் உயர்பீடம் விரைவில் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இதன் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கேள்வி: கரையோர மாவட்டம் பற்றி நீங்கள்தான் அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், உங்களது கட்சியின் தலைவர் இது வரைக்கும் கரையோர மாவட்டம் பற்றி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லையே?
பதில்: தலைவர் கரையோர மாவட்டம் பற்றி பல இடங்களில் பேசியுள்ளார்.

கேள்வி: அவ்வாறு பேசவில்லை. அதற்குரிய ஆதாரங்களை முன் வைக்க முடியுமா?

பதில்: எமது பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கரையோர மாவட்டம் பற்றி பேசியுள்ளார். இதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

கேள்வி: கரையோர மாவட்டம் பற்றி உங்கள் கட்சியின் முன் மொழிவுகளில் தெரிவிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகின்றது. இது பற்றி என்ன சொல்லுகின்றீர்கள்?

பதில்: எமது கட்சியினால் முன் வைக்கப்பட்ட முன்மொழிகளில் கரையோர மாவட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவர் ரவூப் ஹக்கீம் தாம் வழங்கிய அந்த ஆவணத்தில் இது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. தலைவர் எனக்கு அதனை வட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார் அதனை உங்களுக்கு வாசித்துக் காட்டுகின்றேன். அது தேவைப்பட்டால் தரலாம் ( இதன் போது அதனை வாசித்துக் காட்டினார்.

கேள்வி: இந்த ஆவணத்தை வழங்கியது உங்களுக்கு தெரியுமா? நீங்களும் அந்த சமயம் இருந்தீர்களா? தலைவர் வழங்கியதாகச் சொன்னாரா?

பதில்: இத்தகையதொரு ஆவணம் வழங்குபது பற்றி எனக்குத் தெரியும். இதனை வழங்கும் போது நான் உடனிருக்கவில்லை. தான் வழங்கியதாகத் தலைவர் சொன்னார்.

கேள்வி: தலைவர் வழங்கியிருப்பார் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா?

பதில்: எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது.

கேள்வி: கரையோர மாவட்டம் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா?

பதில்: முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. முஸ்லிம்களின் பிரச்சினைக்கு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அலகு தரப்பட வேண்டும்.

கேள்வி: உள்ளுராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தின் போது முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த அனுபவத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு இடைக்கால அறிக்கைக்கு ஆதரவாக செயற்பட முடியும்?

பதில்: உள்ளுராட்சி தேர்தல் திருத்தத்தின் போது எமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது உண்மையாகும். அதில் உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் பற்றியும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உள்ளுராட்சி சபைகளுக்கு குறைவான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பது பற்றியும் சுட்டிக் காட்டி இருந்தோம். அவற்றிக்கு தீர்வு வேண்டினோம். ஆனால், இடைக்கால அறிக்கையை பொருத்த மட்டில் தற்போது அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுமாயின் இதற்கு எதிராக எமது கட்சி செயற்படும். எனது பதவியையும் இராஜினாமா செய்வதற்கு தயங்க மாட்டேன்.

கேள்வி: இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாது போனால் அரசாங்கத்தினை எதிர்ப்பதற்கும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றீர்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் இன்றைய அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென்று தெரிவித்துள்ளாhரே?

பதில்: அவர் மஹிந்தராஜபக்ஷ அணியினர் அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்தே அவ்வாறு தெரிவித்திருப்பார். ஆனால், இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்களின் விடயங்கள் உள்ளடக்கப்படாது போனால் அவர் நிச்சமயாக அதற்கு எதிராக இருப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

கேள்வி: இடைக்கால அறிக்கையில் வடக்கும், கிழக்கும் இணைவதற்கு புதிய அரசியல் அமைப்பு அங்கிகரிக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு இணைப்பை நீங்கள் ஆதரிப்பீர்களா?

பதில்: இடைக்கால அறிக்கையில் வடக்கு, கிழக்கு விடயத்தில் மூன்று ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் வடக்கும், கிழக்கும் இணைவதனை அங்கிகரிப்பது என்பதுள்ளது. என்னைப் பொருத்தவரை வடக்கும், கிழக்கும் தனித் தனி மாகாணங்களாகவே இருக்க வேண்டும். வடக்கும், கிழக்கும் தனித்தனியாக இயங்கும். இதனால்தான் ஒன்பது மாகாணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஒன்பது மாகாணங்கள் என்று தெரிவிக்கப்பட்டாலும் வடக்கும், கிழக்கும் இணையும் பட்சத்தில் எட்டு மாகாணங்கள்தான் இருக்கும். இந்நிலையில் அரசாங்கம் ஒன்பதாவது மாகாணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சாத்தியமான சிங்கள பிரதேசங்களை இணைத்து புதிய மாகாணம் ஒன்றை உருவாக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்: அப்படி நடக்காது. ஒன்பது மாகாணம் சிங்களவர்களைப் கொண்டதாக அமையும் என்பதற்கு பதிலாக முஸ்லிம் மாகாணம் என்றும் கருதலாமே?

கேள்வி: முஸ்லிம் மாகாணம் பற்றி உங்களது கட்சி கோரவில்லையே
பதில்: எமது கோரிக்கைகளை தெளிவாக அரசாங்கத்திற்கு தெளிவாகச் சொல்லியுள்ளோம். தமிழ்த் தேசிய கூட்டமைபைபுக்கும் எடுத்துக் கூறியுள்ளோம்.

கேள்வி: மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கால்களைப் பிடித்ததாக் சொல்லியுள்ளீர்கள். இன்றைய அரசாங்கம் இருந்தால்தான் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்று அவர் கருதி இருக்கலாம். அவர் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக கால்களைப் பிடிப்பதற்கும் தயாராக உள்ளார். இந்நிலையில் நீங்கள் முஸ்லிம் சமூகத்திற்காக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?

பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்றைய அரசாங்கம் தமிழ் மக்களுக்குரியவற்றை தரும் என்று ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றார். இறுதியில் அவர்கள் ஏமாற்றப்படுவார்கள். ஒரு போதும் அரசாங்கம் வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற விடயங்களைச் செய்யாது என்பதே எனது கருத்தாகும். எமது கட்சி முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

கேள்வி: இடைகால அறிக்கையில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பதற்கு அப்பால் இடைகால அறிக்கை அரசியல் யாப்பாக தோற்றம் பெரும்போது வடக்கும், கிழக்கும் ஒரு மாகாணமாகவே அமையும் என்றுள்ளது. ஆதலால், இணைப்பு பற்றி பேச்சுக்கு இடமில்லையே?

பதில்: உண்மைதான். ஆயினும் இடைக்கால அறிக்கை என்பது இன்னும் சட்டமாகவில்லை. அதற்கு இடையில் நாங்கள் சும்மா இருக்கப் போவதில்லை. அவர்கள் நினைத்தமாதிரி இணைத்துக் கொண்டு போவதனை பார்த்துக் கொண்டிருக்கும் பொம்மைகளாக இருக்கப் போவதில்லை. மேலும், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைக்கால அறிக்கைக்கு எதிராக வாக்களித்தால் நிறைவேற்ற முடியுமா என்று கேட்கின்றேன். முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்துள்ளோம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முன் வைத்துள்ளது. முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுமாயின் நிச்சயமாக இடைக்கால அறிக்கை தொடர்பில் சமூகம் சார்ந்த முடிவினையே நாங்கள் எடுப்போம்.

Web Design by Srilanka Muslims Web Team