வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுதக்குழுக்கள் எதுவுமில்லை-சகலரும் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர்! - Sri Lanka Muslim

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுதக்குழுக்கள் எதுவுமில்லை-சகலரும் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனர்!

Contributors

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கில் தற்போது எந்த ஆயுதக்குழுக்களும் இயங்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள்கூட களையப்பட்டு தற்போது சகலரும் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளனரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை என அதன் தலைவர் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அக்கட்சிக்கு எதிராக இது விடயத்தில் எத்தகைய ஆதாரபூர்வமான சாட்சியங்களும் அளிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ. தே. க. எம். பி. சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:-

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு அமைதியிலும் சமாதானத்திலும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. முன்பிருந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. சஜித் பிரேமதாச எம். பி. ஏற்கனவே இருந்த நிலையை வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் அமைதி சூழல் நிலவுகிறது. எந்த வன்முறையும் அங்கு நடக்கவில்லை. சுதந்திரமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு அத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட்டதில்லை என அக்கட்சியின் தலைவர் உறுதியாகக் கூறியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையிலும் அக்கட்சி சாட்சிய மளித்துள்ளது. அதேவேளை அக்கட்சிக்கு எதிராக எந்தவொரு ஆதாரபூர்வமான சாட்சியும் ஒப்புவிக் கப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகலரையும் நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் பல குழுக்கள் சாட்சியமளித்துள்ளன. அந்த ஆணைக் குழுவின் அறிக்கையின்படி ஆயுத பாவனைகள், வன்முறைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. ஆயுதம் வைத்திருக்க சட்டத்தில் எவருக்கும் இடமில்லை.

இந்த நாட்டில் பொலிஸார் மற்றும் படையினரைத் தவிர எவருக்கும் ஆயுதம் வைத்திருக்க அனுமதியில்லை. இத்தகைய சூழலைக் கனவத்திற்கொண்டு ஐ. தே. க. பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்த முயலக் கூடாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

-Tinakaran

Web Design by Srilanka Muslims Web Team