வடமாகாண முதலமைச்சருக்கு ஓரு முஸ்லிம் சகோதரரின் திறந்த மடல்! - Sri Lanka Muslim

வடமாகாண முதலமைச்சருக்கு ஓரு முஸ்லிம் சகோதரரின் திறந்த மடல்!

Contributors

(கே.சி.எம்.அஸ்ஹர்)

வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 23 வருடங்கள் உருண்டோடி விட்டன. இம்மக்களை துரிதமாக குடியேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கு உண்டு. ஜனநாயகம், மனிதவுரிமைகள், என்பன ஒரு மனித இனத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அவை அனைத்து மனித இனத்திற்கும் பொதுவானவை.

இராமனின் முன்னால் நிராயுதபாணியாக நின்ற இராவணனுக்கு இராமன் சொன்னான் இன்று போய்ப் போர்க்கு நாளை வா என்று. இதிலுள்ள யுத்த தர்மம் எவ்வளவு உயர்வானது.
புறாவைக் கொன்று சாப்பிடுவதற்காக பருந்து துரத்திக் கொண்டு வரும் போது புறாவானது. சிபிச்சக்கரவர்த்தியிடம் பாதுகாவல் தேடியது.எனது உணவைத் தாயென பருந்து வாதிட சிபிச்சக்கரவர்த்தி தனது தொடையிலிருந்து சதையை வெட்டிக்கொடுத்தான்.தன்னை நம்பிவந்தமைக்கான தியாகத்தைப் பாருங்கள்.
பசுவின் கன்றை, தேரால் அடித்து தனது மகன் கொன்று விட்டான் என்பதை, நியாயம் கேட்டுவந்த பசுவின் வாதத்தைக் கேட்டறிந்த மனுநீதிச் சோழன் தனது மகனை தேரில் அடித்துக் கொன்றான் என்றால் இவரின் நீதி, தர்மம் எப்படி இருந்திருக்கும்.
தேரிலே சென்று கொண்டிருந்த பாரி மன்னன் படருவதற்கு கொழுகொம்பு இன்றி வளைந்து கிடந்த முல்லைக் கொடிக்காக தனது பெறுமதியான தேரையே விட்டுச்சென்றான்.இதிலே எவ்வளவு காருண்யம் தெரிகிறது.
மயில் எனும் பறவை உடுத்தாது போர்த்தாது என்று தெரிந்து இருந்தும்  மயில் குளிரில் துன்பப்படக் கூடாது என்பதற்காக தனது போர்வையை பேகன் வழங்கினான். என்ன  ஜீவகாருண்யம்.
இந்த இலக்கியங்களின் சொந்தக்கார சமூகங்களைச் சேர்ந்தோர் வடபுல முஸ்லிம்களை வெளியேற்றியமை சரியா? இது ஒரு கறைபடிந்த மனிதவுரிமை மீறல் வரலாறாகி விட்டதே. இதைத் துடைக்க என்ன செய்யலாம்?தமிழ்க் கூட்டமைப்பு  அன்று  முஸ்லிம்  ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியது. இன்று  மாகாண உறுப்பினர் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கியுள்ளது. இதனால் பாவக்கறை நீங்குமா? நாம் எதிர்பார்ப்பது எமது  மண்ணில்  சுதந்திரமாக  வாழவேண்டும். எமது கலை கலாசாரம் தனித்துவமானது. எமது அரசியலும் தனித்துவமானது. இதில் யாரும் குறுக்கிடுவதை  நாம் விரும்பவில்லை.
தமிழர்களும், முஸ்லிம்களும் அண்ணன் தம்பி போல அன்று வாழ்ந்தார்கள். இன்று 23 வருட இடைவெளியால் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமை வளர்ந்துள்ளது. சிலர் இதை நன்கு வளர்க்கின்றனர்.
நீங்கள் சிறந்த இலக்கியங்களின் நேசன்,சிறந்த ஆன்மீக வாதி,சிறந்த நீதிவான், சிறந்த மானிட நேயன். இப்படிப்பட்ட நீங்கள் வடக்கின் முதல்வராக நியமிக்கப்பட்டிருப்பது சற்று  எமக்கு ஆறுதலாக உள்ளது.உங்களின் காலத்தில் அனைத்து  முஸ்லிம்களும் மீள்குடியேற்றப் படவேண்டும். இதனால்தான் அந்த வரலாற்றுக்;கறை நீங்கும்.
1.வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்க முயல்பவரைக் கட்டுப்படுத்துங்கள்.
2.அரச காணிகள் முஸ்லிம்கட்கு வழங்கப்படும் போது மதவாத ரீதியாக அதனைத்திரித்து சமூக மோதலாக மாற்ற முயல்வதைத் தடுங்கள்
3..அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பிரச்சாரங்களை தடுங்கள். அவர் வஞ்சிக்கப்பட்ட  எமது மக்களின் பிரதிநிதி.
4.முஸ்லிம் அரச ஊழியர்களை இனவாதமாகப் பார்ப்பதைத் தடுங்கள்.
5.மாகாண சபை உறுப்பினர்கள் முஸ்லிம்கட்கு எதிராகச் செயற்படாமல் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்ப பாடுபடுமாறு ஆலோசனை வழங்குங்கள்.
6.எமது அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோருடன் இதயசுத்தியுடன் தொடர்புகளைப் பேணவழிகாட்டுங்கள்.
7.வடபுல முஸ்லிம்களும் அம்மண்ணுடன் பூர்வீக உறவு உடையவர்கள் என்பதைப் புரியவைக்கவும்.
 

Web Design by Srilanka Muslims Web Team