வபா பாறுக்குடன் நேர்காணல் » Sri Lanka Muslim

வபா பாறுக்குடன் நேர்காணல்

wafa

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கேள்வி; முஸ்லிம்களுக்கு எதிரான ஞானசார தேரரின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் நாடளாவிய ரீதியிலான ஹர்த்தாலை 24/05/2017 புதன் கிழமை செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தீர்கள். பின்னர் தாங்களாகவே அதை வாபஸ் வாங்கினீர்கள். ஏன் இந்த திடீர் மாற்றம்?

பதில்; முஸ்லீம்களுக்கு எதிராக என்றுமில்லாத அளவு அடாவடித்தன்ங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
எமது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு அதிகாரக்கதிரைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் கையாலாகாதவர்களை நம்பி பிரயோசனமில்லை என்பதால் முஸ்லிம்கள் தம் விடையங்களை தாமாகவே முன்வந்து செய்யவேண்டும் என்பதை புரியவைக்கும் ஒரு விழிப்பூட்டலுக்காகவே ஹர்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

அழைப்பு விடுக்கப்பட்டு சில மணிகளுக்குள் நாடளாவிய ரீதியில் மக்கள் உஷார் நிலைக்கு வந்து விட்டார்கள். ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் பற்றிய விபரம் கேட்டு நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தொடர்பு கொண்ட வண்ணமிருந்தனர்.

அடிப்படையில் ஹர்த்தாலுக்கான அழைப்பின் நோக்கமும் எல்லாத்தரப்பினரையும் உஷார் படுத்துவதேயன்றி ஹர்த்தாலை செய்வதாக இருக்கவில்லை. பாதகமான விழைவுகள் ஏற்படக்கூடியசாத்தியப்பாடுகளே நாட்டிலும் அதிகம் இருந்தன. என்றாலும், ஒரு புறத்தில் அழைப்பை ஏற்று ஹர்த்தாலுக்கு தயாராகிக்கொண்டிந்தவாறே மறுபுறத்தில் ஹர்த்தாலினால் ஏற்படக்கூடிய பிரதிகூலங்களை முன்னிலைப்படுத்தி ஆரோக்கியமான விவாதங்கள் நடளாவிய ரீதியில் நடக்கத்தொடங்கின.
ஆக மொத்தத்தில் முஸ்லிம்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

மேலும், ஆரோக்கியமான அறிவியல் விவாதங்களையும் உந்திவிட்டது
ஹர்த்தாலைப்பற்றிய சமூகத்தின் பல்தரப்பட்ட புரிதலையும் பரீட்சிக்க கிடைத்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக நாடளாவிய ஒரு அதிர்வை ஏற்படுத்தியதுதான் பெரும் வெற்றியென்று கூறலாம்.

தவிரவும், சமூகத்துக்காக ஒரு நாள் வருமானத்தையும் இழக்கத்தயாரில்லாத சுயநலக்கும்பலையும் அடையாளம் காணக்கிடைத்தது. இன்னொரு புறத்தில் எந்த ஆக்கபூர்வமான சிந்தனையும் இல்லாத சிலர் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட செய்தி பரவியதும் இவ்வழைப்பின் தார்ப்பர்யம் அறியாது அவர்களும் அடுத்தடுத்த நாள்களில் ஹர்தாலுக்கான அழைப்புகளை விடுத்து பிரபல்ய வேட்டையில் இறங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

எது எப்படியோ ஹர்த்தால் இக்காலகட்டத்து உகந்ததல்ல என்பதை அறிந்த நிலையில் விடுக்கப்பட்ட அழைப்பை நானாகவே வாபஸ் பெற்றுக்கொண்டேன்.

மேலும் முஸ்லிம்களின் விடையத்தில் தடியெடுத்தவரெல்லாம் தலைவராகும் நிலையிருப்பது மிகவும் ஆபத்தான சமிஞ்சை. ஆகவே, முஸ்லிம்களின் விடையங்களை பொறுப்புள்ள குழுவொன்று கையாள வேண்டும் என்பதை ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட குறுகிய நேரத்துக்குள் மீண்டும் உணர முடிந்தது. ஆகவேதான் முஸ்லிம்களின் விவகாரங்களில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா தலையிட்டு வழிகாட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹர்த்தாலை வாபஸ் பெற்றுக்கொண்டேன்.

கேள்வி; முஸ்லிம்கள் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உங்களது கருத்துக்கு எதிரான கருத்துகளும் தெரிவிக்கப்படுகின்றதே. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: எமது வாக்குகளால் அதிகாரத்துக்கு வந்தோர் தமது தனிப்பட்ட, அரசியல் தவறுகளினால் முஸ்லிம் சமூகத்தின் மானம் மரியாதையை குழிதோண்டிப்புதைத்தவர்களால் முஸ்லிம் சமூகத்துக்கு வழிகாட்ட முடியாது.

அழ்ழாஹ்வினதும் நபி(ஸல்) அவர்களினதும் வழிகாட்டல்களை கற்றுணர்ந்த கண்ணியத்துக்குரிய உலமாக்களைவிட தகுதியானவர்களாய் வேறெவரையும் நான் அறியவில்லை. தவிரவும் சிலர் நினைப்பதுபோல் உலமா சபையில் இருப்போர் அரசியல் அறிவு அற்றோர் அல்ல! பல் கலை அறிவு, ஆற்றலுடைய பல தரப்பட்ட உப குழுக்களைஉள்ளடக்கிய பேரமைப்பே ஜம் இய்யதுல் உலமா என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவே முஸ்லிம்களுக்கு அனைத்து விடையங்களிலும் வழிகாட்டும் தகுதியும் தராதரமும் ஜம் இய்யதுல் உலமாவுக்கே உண்டு.

கேள்வி; அமைச்சர் ரஊப் ஹகீம் மீதான குற்றச்சாட்டு விடையத்தில் உலமா சபை முறையாக செயல்படவில்லை என்றொரு குற்றச்சாட்டு இருப்பதை பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்; அமைச்சர் ரஊப் ஹகீம் விடையமாக உலமா சபையின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதனையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை,
என்றாலும், கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி அமைச்சர் ஹகீம் மீதான குற்றச்சாட்டை உலமா சபை விசாரித்ததாகவும், அமைச்சர் ஹகீம் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகவும் த்ண்டிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று உலமா சபை முற்றுப்புள்ளி வைத்ததாகவும் அறிந்து கொண்டேன். இவைகள் உண்மையெனில் நடந்தவற்றில் முழுமையாக உடன்படுகிறேன்.

இதற்கு மேலாக அந்நிய சட்டம் பின்பற்றப்படாத நாடொன்றில் வேறெதையும் செய்யலாம் என கருதவில்லை. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹகீமை இராஜினாமா செய்வித்திருக்கலாம் என்ற ஆதங்கம் அரசியல் களத்தில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதே பதில் வேண்டி நிற்கும் கேள்வியாகும்.

அமைச்சர் ஹகீம் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என ஜம் இய்யதுல் உலமா பகிரங்கமாய் வெளிப்படுத்தியிருந்தால் இந்த ஆதங்கம் நியாயமானதே. அப்படியில்லாமல் இவ்விடையத்தை ரகசியமாகவே உலமா சபை கையாண்டிருந்தால் இராஜினாமா செய்ய வைப்பதினூடாக ஒரு முஸ்லிமுடைய மானத்தை பகிரங்கமாக பறிக்க கூடாது என குர் ஆன் ஹதீஸின் வழிகாட்டல்களை பின்பற்றி முடிவு செய்திருக்கலாம்.

எதுவானாலும் குர் ஆன், ஹதீஸின் வழிகாட்டல் பிரகாரமே உலமா சபை முடிவுகளை எடுத்திருக்கும் என்பது எனது நம்பிக்கை. இதற்கான ஆதார வழிமுறைகளை பகிரங்கமாக ஜம் இய்யதுல் உலமா வெளியிடாததிலிருந்தே இவ்விடையத்தை எத்தனை ரகசியமாக உலமா சபை கையாழ்கிறது என்பது புலனாகிறது.

ஜம் இய்யதுல் உலமா என்பது இறை அச்சமுடைய உலமாக்களின் அமைப்பு என்பதில் எனக்கு அறவே சந்தேகமில்லை.
ஆகவேதான் ஜம் இய்யதுல் உலமாவை முஸ்லீம்கள் தம் வழிகாட்டியாகவும் தலைமைத்துவ சபையாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன், தொடர்ந்தும் வலியுறுத்துவேன்.

கேள்வி; உங்களால் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கின் எழுச்சி செயலிழந்து விட்டதா?

பதில்; கிழக்கின் எழுச்சி என்பதும் ஹர்த்தாலுக்கான அழைப்பை போலவே ஒரு விழிப்பூட்டல் கோசமே!
எமது கையாலாகாத அரசியல் நிலையை மக்களுக்கு எடுத்துக்கூறி மாற்று அரசியல் சிந்தனையை தூண்டுவதினூடாக எதிர்கால அரசியல் ஆபத்துக்கள் பற்றி குறிப்பாக கிழக்கு முஸ்லீம்களும் பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் சிரதையாய் இருக்கவேண்டும் என்ற விழிப்பூட்டலை கிழக்கின் எழுச்சி வெற்றிகரமாய் செய்துள்ளது.

கிழக்கின் எழுச்சியின் அடுத்த கட்ட இலக்கான தலைமைத்துவ சபை நிறுவலில் அச்சபைக்கு தகுதியானவர்கள் யார் என்று அடையாளம் காண்பதிலும் அவர்களை ஒன்றிணைப்பதிலும் பாரிய தெரிவுச்சிக்கலை எதிர் நோக்குகின்றோம்.

ஏற்கனெவே அரசியல், அதிகாரங்களில் இருந்தவங்களை உள்வாங்கிய தலைமைத்துவ சபையை உருவாக்கும் யோசனையும் பிராஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தலைமைத்துவ சபை என்பது இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றும் இறையச்சம் கொண்டோரை உள்ளடக்கியதாகவே அமையவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
மாமூல் அரசியல்வாதிகளுக்கு புதிய முகக்கவசமிட்டு தலைமைத்துவ சபையெனும் உயர் இஸ்லாமிய கோட்பாட்டை கேவலப்படுத்த நாம் விரும்பவில்லை.

இக்கட்டத்தில் சகோதரர் ரியாஸ் சுலைமா லெப்பையால் பத்து வருடங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட NDPA கட்சியை தேர்தல் ஆணையகத்தின் பதிவு செய்ய விண்ணப்பிக்கும் வேளையில் அக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகிக்குமாறு என்னிடம் வேண்டிக்கொண்டதுடன் தலைமைத்துவ சபையைக்கொண்டதாய் கட்சியின் யாப்பையும் வடிமைக்கச்சொன்னார்,
தலைமைத்துவ சபையைக்கொண்ட கட்சியின் பொறுப்பை ஏற்பதில் எனக்கு சிக்கலிருக்கவில்லை.

கட்சியின் தலைமைத்துவ சபையின் அமீராக இருக்கும் நிலையில் கிழக்கின் எழுச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதில் என்க்கிருக்கும் சிரமங்கள் கருதி சகோதரர் அஸ்ஸுஹூரின் பொறுப்பில் கிழக்கின் எழுச்சியை விட்டுவிட்டேன். இதன்பிறகான கிழக்கின் எழுச்சியின் செயல்பாடுகளை சகோதரர் அஸ்ஸுஹூரே முன்னெடுத்து செல்வார். எனது ஆலோசனை தேவைப்படுமாயின் தொடர்ந்தும் வழங்குவேன்.

கேள்வி; அஸ்ஸுஹூரை NDPA கட்சிக்குள் உள்வாங்கவில்லையா?

பதில்; NDPA கட்சியின் ஸ்தாபகர் சகோதரர் ரியாஸ் சுலைமா லெப்பை அவர்களே அவ்விடையத்தை செய்யவேண்டும், உரிய நேரத்தில் செய்வார் என்று நம்புகிறேன்.

கேள்வி; எதிர்வரும் தேர்தல்களில் உங்கள் கட்சி போட்டியிடுமா?

பதில்; நிட்சயமாய் போட்டியிடும்.

கேள்வி; நீங்களும் போட்டியிடுவீர்களா?

பதில்; இல்லை.

கேள்வி; ஏதாயினும் கட்சிகளுடன் கூட்டுச்சேரும் எண்ணமுண்டா?

பதில்; இல்லை, புதிய அரசியல் கலாச்சாரத்தை தோற்றுவிக்க முயன்றுகொண்டிருக்கும் நாம் எந்த மாமூல் அரசியல் கட்சிகளுடன் கூட்டுச்சேர்வது சாத்தியமில்லை

Web Design by The Design Lanka