விநியோகத்தில் புதிய நடைமுறை - 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலை..! - Sri Lanka Muslim

விநியோகத்தில் புதிய நடைமுறை – 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலை..!

Contributors
author image

Editorial Team

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த நாளுக்கான எரிபொருள் தொகையை பெறுவதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”இந்த திட்டத்திற்கு அமைய, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9:30 மணிக்கு முன்னர் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அன்றைய வருமானத்துக்கு முன்பாக பணம் செலுத்துவது என்பது அவர்களுக்கு கடினமானது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலை

இரவு 9:30 மணிக்குள் அல்லது அதற்கு முன் பணம் செலுத்தப்படாவிட்டால் அடுத்த நாள் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் (CPSTL) எரிபொருளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்காது. இதன் விளைவாக, சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படலாம்.

கடந்த வாரங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன, ஏனெனில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இரவு 9:30 மணிக்கு முன் பணம் செலுத்த முடியவில்லை.

லங்கா ஐ.ஓ.சி நிரப்பு நிலையங்களும் இதேபோன்ற கட்டண முறையைக் கொண்டுள்ளன, ஆனால் அவை நள்ளிரவு வரை காலக்கெடுவைக் கொண்டுள்ளன. இந்த ஏற்பாடு வசதியானது என்கிறார்கள்.

வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பு

அரசாங்கம் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், நுகர்வோர் தேவையும் அதிகரித்துள்ளதால் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட வேண்டும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு 4000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3000 மெற்றிக் தொன் பெற்றோலை விநியோகிக்கிறது” என்றார்.

இலங்கை பெற்றோலிய முகவர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன இது தொடர்பில் கூறுகையில்,

எரிபொருள் பாஸ் நடைமுறை வெற்றிகரம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்ட போதிலும், சிலருக்கு உரிய நேரத்தில் எரிபொருள் விநியோகம் செய்யப்படவில்லை.

காசோலைகளை முன்கூட்டியே வழங்குவது வியாபாரிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலாக உள்ளது. இது பல நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

தேசிய எரிபொருள் பாஸ் (NFP) வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR குறியீடு முறையைப் பின்பற்றுவதாகவும் அவர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team