வெளிநாடு செல்லும் பெண்கள் 15 பவுண் நகைகளையே அணிந்து செல்ல முடியும் : சுங்கத்திணைக்களம் யோசனை - Sri Lanka Muslim

வெளிநாடு செல்லும் பெண்கள் 15 பவுண் நகைகளையே அணிந்து செல்ல முடியும் : சுங்கத்திணைக்களம் யோசனை

Contributors

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்தப்படுவதையும் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கம் கொண்டு வரப்படுவதையும் தடுக்க விஷேட திட்டங்களை அமுல் படுத்த இலங்கை சுங்கத்திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற சுங்க தினைக்கள உயரதிகாரிகளின் விஷேட கூட்டத்திலேயே விஷேட திட்டங்களை அமுல் செய்யும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன் படி நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு பயணிப்போர் அணிந்து செல்லத் தக்க தங்க நகைகளின் அளவில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன.
வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்கள் அதிகபட்சமாக அணிந்து செல்லத்தக்க தங்க நகைகளின் அளவானது 15 பவுண்களுக்கும், ஆண்கள் அணிந்து செல்லத்தக்க தங்கத்தின் அளவானது 5 பவுண்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த தங்க நகைகளை அணிந்த நிலையிலேயே குறித்த பயணி செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கும் சுங்க திணைக்களம், மீண்டும் நாட்டுக்குள் திரும்பி வரும் போதும் அதே அளவான தங்க நகைகளை குறித்த இலங்கையர் அணிந்திருக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளரும் சுங்க சேவைகள் பிரிவின் பணிப்பாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
இந்த கட்டுப்பாடுகள் தொடர்பான விபரங்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவித்த அவர், குறித்த கட்டுப்பாடுகள் இலங்கயர்கள் விடயத்தில் மட்டுமே அமுல் செய்யப்படும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் விஷேட திட்டங்களை அமுல் படுத்தவுள்ள சுங்க தினைக்களம் அவர்களும், தாம் வெளியேரும் போது கொண்டு செல்லும் தங்கம் குறித்து சுங்க அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது அவசியம் என சுங்க பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கொச்சி விமான நிலையத்தில் வைத்து 56 இலங்கயர்கள் தங்கம் கடத்தியமை தொடர்பில் அந் நாட்டு சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பில் நேற்று சுங்க திணைக்கள உயர் மட்ட அதிகாரிகள் குழு விரிவாக ஆராய்ந்தது. எவ்வாறு குறித்த 56 பேரும் கட்டு நாயக்க விமான நிலையம் ஊடாக தப்பிச்சென்றனர் என்பது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இதனையடுத்தே சுங்க தினைக்களம் இலங்கயர் ஒருவர் அணிந்து செல்லும் தங்கத்தின் அளவில் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதிக்கும் முடிவுக்கு வந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.vk

Web Design by Srilanka Muslims Web Team