ஷார்ஜாவில் புதிய சட்டம்; வெளிநாட்டு பெண் வேலையாட்களுக்கு விஷேட சலுகைகள் - Sri Lanka Muslim

ஷார்ஜாவில் புதிய சட்டம்; வெளிநாட்டு பெண் வேலையாட்களுக்கு விஷேட சலுகைகள்

Contributors

qout356

-ஷார்ஜா-

வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு சென்று பணி புரியும் பெண்களுக்கு கருவுற்றிருக்கும் காலங்களில், சம்பளத்துடன் கூடிய 45 நாட்கள் பேறு கால விடுமுறை அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஷார்ஜா மன்னரின் உத்தரவின்படி, இந்த விடுமுறையை 60 நாட்களாக உயர்த்துவது தொடர்பாக ஷார்ஜா அரசின் செயல் திட்ட குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

 

இதனையடுத்து பிரசவ விடுமுறை தொடர்பாக புதிய பரிந்துரைகளை செயல் திட்ட குழு நேற்று மன்னருக்கு அனுப்பி வைத்தது.

 

இதன்படி, ஓராண்டு காலத்துக்கு மேலாக ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தில் பணியாற்றிய பெண் கருவுற்றிருந்தால் அவருக்கு முழு சம்பளத்துடன் கூடிய 60 நாள் பேறுகால விடுமுறையும், ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றியுள்ள பெண்களுக்கு பாதி சம்பளத்துடன் 60 நாள் பேறுகால விடுமுறையும் அளிக்கப்பட வேண்டும்.

 

இந்த விடுமுறையை பிரசவத்துக்கு முன்பும், பின்பும் தங்களின் வசதி போல எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்துக்கு பிறகும் வேலைக்கு திரும்ப முடியாத பெண்கள் சம்பள இழப்புடன் கூடுதலாக 10 நாள் விடுமுறை எடுத்து கொள்ளலாம்.

 

மேலும், பிரசவ விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண்களுக்கு குழந்தை பிறந்த 18 மாதங்கள் வரை கைக்குழந்தைக்கு பாலூட்டி, பராமரிப்பதற்காக பணி நேரத்துக்கு இடையில் 2 முறை அரை மணி நேர ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.

 

இதற்காக சம்பளம் ஏதும் பிடித்தம் செய்ய கூடாது. இதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்து ஷார்ஜாவில் இருக்கும் ஆண் பணியாளரின் மனைவி பிரசவித்து விட்டால் குழந்தையை சென்று பார்த்து விட்டு வருவதற்காக அவருக்கு முழு சம்பளத்துடன் கூடிய 3 நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும்  இந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
இந்த புதிய சட்டத்துக்கு மன்னர் ஷேக் சுல்தான் பின் மொஹம்மத் அல் குவாசிமி விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளார். அதன் பின்னர், இந்த சட்டம் ஷார்ஜாவில் வாழும் அனைவருக்கும் பொருந்தும் உத்தரவாக மாறிவிடும் என அரசின் செயல் திட்ட குழு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

ஐக்கிய அரபு நாடுகளின் வரிசையில் இத்தகையதொரு புதிய சட்டத்தை உருவாக்கி, நிறைவேற்றவுள்ள முதல் நாடு ஷார்ஜா என்பது குறிப்பிடத் தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team