ஷியா நாடான இரானுடன் உறவைப் புதுப்பித்தது கத்தார் - Sri Lanka Muslim

ஷியா நாடான இரானுடன் உறவைப் புதுப்பித்தது கத்தார்

Contributors
author image

Editorial Team

இரான் நாட்டுடனான தொடர்பை கத்தார் துண்டிக்க வேண்டும் என்னும் நான்கு சக அரபு நாடுகளின் வற்புறுத்தலையும் மீறி, அந்நாட்டுடனான ராஜாங்க உறவுகளைக் கத்தார் முழுமையாகப் புதுப்பித்துள்ளது.

பயணத் தடைக்குப் பின்பு தனது வான்வெளியை கத்தார் விமானங்களுக்கு திறந்து இரான் உதவியதுபடத்தின் காப்புரிமைAFP
Image captionபயணத் தடைக்குப் பின்பு தனது வான்வெளியை கத்தார் விமானங்களுக்கு திறந்து இரான் உதவியது

இஸ்லாமின் ஷியா பிரிவைச் சேர்ந்த மதகுரு ஒருவர் 2016-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து இரானில் இருந்த சௌதி தூதரகங்கள் தாக்குதலுக்கு ஆளான பின்னர், கத்தார் இரானில் இருந்த தனது தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஆனால், தற்போது இரான் உடனான இருதரப்பு உறவுகளையும் அனைத்துத் துறைகளிலும் கத்தார் பலப்படுத்த விரும்புகிறது. கடந்த ஜூன் மாதம் தனது அண்டை நாடுகளின் பயண மற்றும் வர்த்தகத் தடைகளுக்கு கத்தார் ஆளானபோது, நிலைமையைச் சமாளிக்க இரான் கத்தருக்கு உதவியாக இருந்தது.

சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்வதாகவும், உலகின் மிகப்பெரிய எரிவாயுக் களத்தைத் தான் பகிர்ந்து கொள்ளும் இரான் நாட்டுடன் அளவுக்கும் அதிகமாக நெருக்கம் காட்டுவதாகவும் கத்தார் மீது குற்றம் சாட்டின. ஆனால், அவற்றை கத்தார் திட்டவட்டமாக மறுத்தது.

இரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தங்கள் நாட்டுத் தூதர் எப்போது திரும்புவார் என்று கத்தார் இன்னும் அறிவிக்கவில்லை.

எனினும், இரான் வெளியுறவு அமைச்சர் மொகமத் ஜவாத் ஜரீஃப் உடன் கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் மொகமத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டது.

Map

கத்தார் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அவர்கள் இருவரும் இருநாட்டு உறவுகள், முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் பிற பொதுவான விவகாரங்கள் குறித்து விவாதித்தாகக் கூறப்பட்டுள்ளது.

அண்டை நாடுகள் கத்தருக்கு விதித்த தடை குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்தத் தடையின்போது 27 லட்சம் மக்கள் வசிக்கும் கத்தார் நாட்டுக்கு கப்பல் மற்றும் விமானம் மூலம் உணவுப்பொருட்களை அனுப்பியதோடு மட்டுமல்லாமல், தனது வான்வெளியை கத்தார் விமானங்களுக்குத் திறந்து இரான் உதவியது.

கத்தாரின் இந்த அறிக்கை குறித்து சௌதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

 

1972-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்றதாக அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்ட கத்தார் நாட்டு ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சௌதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் முடி இளவரசர் மொஹமத் பின் சல்மான் ஆகியோர் சந்தித்த ஒரு வார காலத்திற்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த மாத இறுதியில் கத்தார் நாட்டு யாத்ரீகர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள, கத்தார் அரசில் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாத, வெளியேற்றப்பட்ட ஷேக் அப்துல்லா பின் அலி அல் தானி உதவியதாக சௌதி அரசு கூறியிருந்தது.

தோகா, கத்தார்படத்தின் காப்புரிமைREUTERS
Image captionஇரானுடன் உறவைத் துண்டிக்க அண்டை நாடுகளின் வற்புறுத்தலை கத்தார் நிராகரித்தது

கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்களை மெக்கா அழைத்து வர சௌதி அரேபிய விமான நிறுவனத்திற்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்ள சௌதி மன்னர் சல்மான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மற்றவர்கள் பாலைவனப் பகுதியில் இருக்கும் இரு நாட்டு எல்லையைக் கடந்து தரை வழியாக மெக்கா வரலாம் என்றும் சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹஜ் பயணத்திற்காக பயணிகளை அழைத்துச் செல்லும் சௌதி விமானத்தை கத்தார் தலைநகர் தோகாவில் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக சௌதி அரேபியா கூறும் குற்றசாட்டை மறுத்துள்ள கத்தார் அரசு, அதற்கான விண்ணப்பம் தவறான அமைச்சகத்துக்கு அனுப்பட்டதாகக் கூறியுள்ளது.

மெக்கா செல்லும் பயணிகள் சௌதி அரேபியாவுக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று சௌதி அரசு எடுத்துள்ள முடிவை, செவ்வாயன்று விமர்சித்துள்ள கத்தார் வெளியுறவு அமைச்சகம், கத்தார் மக்கள் பயணிப்பதற்கான செலவை யாரும் ஏற்க வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளது. (BBC)

Web Design by Srilanka Muslims Web Team