ஸ்மித் 227*, டிவில்லியர்ஸ் 157* தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு - Sri Lanka Muslim

ஸ்மித் 227*, டிவில்லியர்ஸ் 157* தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு

Contributors

பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 460 ரன் குவித்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் விளாசினார். துபாய், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் வெறும் 99 ரன்னுக்கு சுருண்டது. தென் ஆப்ரிப்ப பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஸ்டெயின் 3, மார்னி மார்க்கெல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்திருந்தது. அல்விரோ பீட்டர்சன் 26, எல்கார் 23, காலிஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கிரீம் ஸ்மித் 67, ஸ்டெயின் 3 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஸ்டெயின் 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதைத் தொடர் ந்து ஸ்மித்துடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் நிதானமாக ரன் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இவர்களைப் பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் தனது 5வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மறுமுனையில் டிவில்லியர்ஸ் தனது 17வது சதத்தை அடித்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 460 ரன் எடுத்துள்ளது. ஸ்மித் 227 ரன் (367 பந்து, 16 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 157 ரன்னுடன் (262 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் உள்ளனர். கைவசம் 6 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்க அணி 361 ரன் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team