ஸ்வீடனிலிருந்து குரங்குகளைப் பெற சவுதி அரேபியா மறுப்பு - Sri Lanka Muslim

ஸ்வீடனிலிருந்து குரங்குகளைப் பெற சவுதி அரேபியா மறுப்பு

Contributors
author image

BBC

ஸ்வீடனுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே நிலவும் இராஜதந்திர மோதல் காரணமாக, ஸ்வீடிஷ் மிருகக்காட்சிசாலையிலிருந்து நான்கு சிறிய அமேசோனியன் வகை குரங்குகளைப் பெற்றுக்கொள்ள சவுதி அரேபியா மறுத்துள்ளது.

 

 
ஸ்கான்ஸ்கென் மிருகக்காட்சிச் சாலையிலிருந்த மிகச்சிறிய குரங்கு இனத்தைச் சேர்ந்த இவை ரியாதிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு செல்லவிருந்தன.

 

 

அரசியல் சூழல் காரணமாக அந்தக் குரங்குகளை அவர்களுக்கு அந்தக் குரங்குகள் தேவையில்லை என்று கூறப்பட்டதாக ஸ்கான்ஸ்கென் மிருகக்காட்சிசாலையின் தலைவர் ஜொனாஸ் வாட்ஸ்ட்ராம் கூறுகிறார்.

 
சவுதி அரேபியாவில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஸ்வீடன் கருத்து வெளியிட்டதை அடுத்து, கடந்த மாதம் அந்த நாட்டுக்கான தமது தூதரை சவுதி அரேபியா திரும்ப அழைத்துக் கொண்டது.
இதையடுத்து சவுதிக்கான ஆயுத விற்பனையை ஸ்வீடன் நிறுத்தியது.

 

 

இப்போது உலகில் மிகவும் சிறிய வகை குரங்குகளை ஸ்வீடனிலிருந்து பெற்றுக் கொள்ள சவுதி அரேபியா மறுத்துள்ளது. அந்தக் குரங்குகள் ஒவ்வொன்றும் 100 கிராம்களுக்கு சற்று கூடுதலான எடை கொண்டவை.

 
சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கையை வேடிக்கையாகவுள்ளது என்று வால்ட்ஸ்ராம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஸ்வீடிஷ் தொழிலதிபர்களுக்கு மீண்டும் விசா வழங்கும்போது, குரங்குகளுக்கும் அந்த அனுமதி கிடைக்கக் கூடும் என்று அவர் நக்கலடித்துள்ளார்.

 

 

கடந்த மாதம் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் மார்காட் வால்ஸ்ட்ராம் சவுதியின் உள்நாட்டு விவகாரங்களில் அப்பட்டமாக தலையிட்டார் என்றும் அவரது பேச்சு புண்படுத்தும் வகையில் இருந்தது என்று கூறி அவர் மீது கடுமையான விமர்சனங்களை சவுதி அரசாங்கம் வைத்தது.

 

 

இதையடுத்து கெய்ரோவில் நடைபெற்ற அரபு லீகின் கூட்டத்தில் மார்காட் வால்ஸ்ட்ராம் அம்மையாரை உரை நிகழ்த்தவிடாமல் சவுதி அரேபியா தடுத்தது.

 

 

அந்த உரையில் அவர் கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம், ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சுதந்திரம் ஆகியவை குறித்தும், அரபு நாடுகள் மகளிர் உரிமை மற்றும் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் மற்றும் போதிய வளங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team