ஹசன் அலியை மதிக்கின்றோம்: ஆனால் அவருடைய முரண்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது - Sri Lanka Muslim

ஹசன் அலியை மதிக்கின்றோம்: ஆனால் அவருடைய முரண்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(video)

முன்னால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் சகோதரர் ஹசன் அலி மூத்த அரசியல்வாதி என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதே போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு கட்சியினுடைய சகல நடவடிக்கைகளிலும் முன்னின்று செயற்பட்டவர் என்பதனையும் ஏற்றுகொண்டே ஆக வேண்டும்.

ஆனால் மறுபக்கத்திலே அவர் கட்சியுடன் முரண்பட்டுகொண்டு வெளியேறிய விதத்தினை ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் மகாண சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஆரிஃப் சம்சுடீன் தெரிவிக்கின்றார்.

மேலும் குறித்த விடயம சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த சட்டத்தரணி ஆரிஃப் சம்சுடீன்….. ஹசன் அலி கட்சியிடைய இஸ்தாபக உறுப்பினராகவும், மூத்த போராளியாகவும் இருந்து கொண்டு தனக்கு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்க வில்லை என்பதற்காக கட்சியினை உதறி தள்ளிவிட்டு இவ்வாறான முடிவினை எடுத்து கட்சிக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக உள்ள அதே இடத்தில் எங்களுக்கு மன வேதனை அளிக்க கூடிய விடயமாக உள்ளது.

தொடர்ச்சியாக ஒரு நபருக்கு தேசிய பட்டியலினை கொடுக்க முடியாத சூழ் நிலையிலும், ஏற்கனவே கட்சியினால் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு இரண்டு தடவைகள் தேசிய பட்டியலினை வழக்கி கெளரவித்திருக்கின்ற நிலையில் சகோதரர் ஹசன் அலி மீண்டும் தேசிய பட்டியலினை தனக்கு தர வேண்டும் என கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டு வெளியேறியிருப்பதனை அம்பாறை மாவட்ட மக்கள் ஒரு பொழுதும் அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதே எனது கருத்தாக இருக்கின்றது.

இவ்வாறு ஹசன் அலி தேசிய பட்டியல் விவகாரம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரசுடன் முரண்பட்டுக்கொண்டும், கூட்டணிகளை அமைத்து கொண்டும், செயற்படுவதினால் வருகின்ற பிரதேச சபை தேர்தலிலோ அல்லது முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியிலோ எந்த வித பாதிப்பினையும் ஏற்படுத்த போவதில்லை. அரசியல் களத்திலிருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற எங்களை போன்றவர்களுக்கு அது மிகவும் தெளிவான விடயமாக காணப்படுகின்றது. போராளிகள் இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடனும் தலைமைக்கு விசுவாசமாகவுமே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

மறு பக்கத்திலே உள்ளூராட்சி தேர்தல் என்பது குடும்ப ரீதியான தேர்தல் என கூறப்படுகின்ற பொழுதிலும்,- குறிப்பிட்ட வட்டாரங்களுக்குள் எந்த நபர் பாரிய அளவில் குடும்ப செல்வாக்கினை கொண்டிருக்கின்றாரோ.? அவர்தான் வெற்றியடைவார் என்கின்ற தேர்தலாக இருக்கின்ற நிலையிலும் கட்சியினுடைய தனிப்பட்ட பிடிப்பின் அடிப்படையிலும், தனித்துவமான கட்சி என்கின்ற அடிப்படையிலும் மக்கள் முஸ்லிம் காங்கிரசிற்கே வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள் என்பதே அம்பாறை மாவட்டத்து உண்மையான அரசியல் கள நிலைமையாகும்.

ஹசன் அலியினுடைய சகல அடிப்படை விடயங்களுக்கும் மூல காரணமாக அமைவது அவருக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட வில்லை என்ற ஒரு காரணம் மட்டுமே ஆகும். கணவனும் மனைவியும் சண்டை பிடிப்பது ஒரு காரணத்தினை மையமாக கொண்டதாக அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் வெளியில் வந்து மக்களிடம் கூறுகின்ற காரணம் வேறு விடயமாக இருக்கும். இவ்வாறே ஹசன் அலியும் தனக்கு தேசிய பட்டியல் கிடைக்க வில்லை என்பதற்காக வெளியிலே வந்து கூறுகின்ற காரணமாக அமைவது தன்னிடம் இருந்த செயலாளர் நாயகத்தின் அதிகாரங்களை தலைமைத்துவம் குறைத்து விட்டது என்பதும், அதனால்தான் தான் கட்சியினை விட்டு வெளியேறியது என்பதுமாகும்.

இவ்வாறு தேசிய பட்டியலுக்காக முரண்பட்டு கொண்டிருக்கின்ற ஒருவரை கட்சியினுடைய செயலாளர் நாயகமாக வைத்துக்கொண்டு கட்சியினை பாதிப்பிற்கு உட்படுத்த முடியாது. கட்சியினை தொலைக்க முடியாது. கட்சியானது எவருக்கு விற்கப்படும் என்பதனை கூறவும் முடியாது. எனவே கட்சியினை நிலைப்பட்டினையும், கெளரவத்தினையும் பாதுகாக்கும் பொருட்டு கட்சியினுடைய பொது செயலாளராக குறித்த நபரினை தலைமைக்கு தொடர்ந்தும் வைத்திருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தலைமையா.? அல்லது பொது செயலாளரா.? என்ற போட்டி நிலவியதனை நாங்கள் கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது. தனக்கு தேசிய பட்டியல் தராவிட்டால் தான் கட்சியின் பொது செயலாளராக இருந்து கொண்டு கட்சியினை படுகுழிக்குள் தள்ளுவேன் என கூறும் நபரை கட்சியில் மேலும் வைத்துகொண்டு அழகு பார்க்க முடியாது.

இதனை தேசிய அரசியலிலும் சரி பன்நாட்டு அரசியலும் சரி தெளிவாக விளங்கிகொள்ள கூடிய விடயமாக உள்ளது. பொது செயலாளராக இருந்து கொண்டு இன்னொரு நபருக்கு தேசிய பட்டியலினை கொடுப்பதற்கு ஹசன் அலி ஒரு பொழுது அங்கீகரிக்கவில்லை.

இதுதான் ஹசன் அலியினுடைய உண்மையான பிரச்சனையாக இருந்து. அந்த நிலையில் எமது கட்சியின் தலைமை தீர்க்கமான முடிவினை எடுக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது என்ற நீண்ட பதிலினை முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினராகவும் செயலாளர் நாயகமாகவும் நீண்ட காலமாக செயற்பட்ட ஹசன் அலி கட்சியினை விட்டு வெளியேறி முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான கூட்டமைப்பினை உருவாக்கி செயற்பட்டு வருவதானது வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எவ்வகையான பாதிப்பினை உங்களுடைய கட்சிக்கு ஏற்படுத்தும் என்ற கேள்விக்கே முன்னாள் கிழக்கு மகாண சபை உறுப்பினர் ஆரிஃப் சம்சுடீன் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் சமகால அரசியலில் முக்கிய தாக்கத்தினை செலுத்தும் விடயமாக காணப்படுக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சட்டத்தரணி ஆரிஃப் சம்சுடீன் வழங்கிய விரிவான பதிகள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team