ஹிருணிக்காவுக்கு எதிரான இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கு - 15 வது முறையாக ஒத்திவைப்பு! - Sri Lanka Muslim

ஹிருணிக்காவுக்கு எதிரான இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கு – 15 வது முறையாக ஒத்திவைப்பு!

Contributors

கொழும்பு, தெமட்டக்கொடை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சிய விசாரணைக்கான தினம் பெப்ரவரி 28ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.

நேற்று (30) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சாட்சியங்களை முன்னெடுப்பதற்கு மேலதிக திகதியை கோரியதை அடுத்து பெப்ரவரி 28ஆம் திகதிக்கு  சாட்சிய விசாரணைக்கான தினம் அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டப்பட்டது.

இதேவேளை, நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் அதிகுற்றப்பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வீடியோ ஆதாரங்களின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவை என்றும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ மன்றில் கோரி நின்றார்.

இந்த வழக்கின் சாட்சிய விசாரணை 6 வருடங்களாக பிற்போடப்பட்டு வருவதாக முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி சாட்சிய விசாரணை இடம்பெறும் என்றும் வழக்கு ஒத்திவைக்கப்படுவது இதுவே கடைசி முறை என்றும் நீதிபதி அமல் ரணராஜா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு டிசெம்பர் 21ஆம் திகதியன்று, ஹிருணிகா எம்.பிக்குச் சொந்தமான டிபெண்டர் ரக வாகனத்தில் வந்து தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞனொருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் ஹிருணிக்கா மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்குடன் தொடர்புடைய எண்மர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், ஹிருணிகா எம்.பி தன்மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார். எண்மரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர் (8ஆவது குற்றவாளி) என்பதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவர் ஒருவரைத் தவிர, குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற ஏழு குற்றவாளிகளுக்கும் 12 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், 2, 8ஆவது குற்றவாளிகள் தவிர அறுவருக்கு தலா 32,000 ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், தாக்கப்பட்ட நபருக்கு 285,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் கட்டளையிடப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team