ஹிஷாலினியின் மரணம் - மலையக மக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறதா..? - Sri Lanka Muslim

ஹிஷாலினியின் மரணம் – மலையக மக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறதா..?

Contributors

ஈஸ்டர் குண்டு வெடிப்பினூடாக கத்தோலிக்கர்களையும் முஸ்லிம்களையும் பிரித்த தந்திரம்; ஹிஷாலினியின் மரணத்தினூடாக மலையக மக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஏழையாக பிறந்ததினால்  சிறுவயதிலேயே வேலை செய்து வயிறு கழுவும் நிர்ப்பந்தத்தில் தனது உயிரையே இழந்திருக்கின்ற ஹிஷாலினியின் மரணத்தின் பின்னணி பக்க சார்பின்றியும் தலையீடுகளின்றியும் சுதந்திரமாக விசாரிக்கப்பட்டு  சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் இரண்டு கருத்துக்கு இடமே கிடையாது. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.

ஆனால், தற்போது இவ்விவகாரம் அரசியலாக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக குறித்த சில ஊடகங்கள்;

கொரோனாவின் நான்காவது அலை பற்றி இப்போது பேசுவதில்லை. 

பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி பேசுவதில்லை. 

 அத்தியவசிய பொருட்கள் இறக்குமதி வங்கிகளில் டொலர் இல்லாமையால் நின்று விட்டதைப் பற்றி பேசுவதில்லை. 

அத்தியவசிய பொருட்களின் விலை நாளாந்தம் உயர்ந்து செல்வதைப் பற்றி பேசுவதில்லை.

பல்லாயிரக்கணக்கானவர்கள் தொழில் இழந்து நிற்பதைப் பற்றிப் பேசுவதில்லை.

மாறாக, நிமிடத்திற்கு நிமிடம் றிசாட் பதியுதீனின் வீட்டில் நிகழ்ந்த ஹிஷாலினியின் மரணத்தை பற்றி மட்டும்தான் பேசுகின்றன. 

இதனை பார்க்கும் போது;

டாக்டர்  ஷாபி 4000 பேருக்கு கருத்தடை செய்ததாகக் கூறிய செய்தி

அம்பாரை ஹொட்டலில் கொத்துரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை போட்டதான செய்தி

பெண்களின் உள்ளாடையில் கருத்தடை மருந்து சேர்க்கும் செய்தி

அளுத்கம முஸ்லிம் விரோத கலவரப் பின்னணி 12 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டதான செய்தி

ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்கு முன்னர் 4000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டதான செய்தி போன்ற செய்திகளே நினைவுக்கு வருகின்றன. 

றிசாட் பதியூதீனை வைத்தே கடந்த இரு தேர்தலை நடாத்தி முடித்தனர். இலங்கையில் ஒட்டுமொத்த இஸ்லாமிய தீவிரவாதத்தின் முகமாக றிசாட் பதியூதீனை காட்டியே தேர்தல்களை வென்றனர். இன்றும் அப்படி ஒரு தேவை எழுந்திருக்கிறது. 

ஆரம்பத்தில் கூறியதை போன்று  கொரோனா 04ஆம் அலை, பொருளாதார வீழ்ச்சி, டொலரின்மை, விலையேற்றம், தொழிலிழப்பு என இவை எல்லாவற்றையும் மூடி மறைக்க  மறக்கடிக்க  ஏதாவது ஒரு Breaking News தேவைப்படுகிறது. அது ஹிஷாலினியின் மரணமும்  றிசாட் பதியூதீனின் குடும்ப வகிபாகமும் கிடைத்திருக்கிறது. அதனால் வாய்க்கு வந்ததெல்லாம் செய்தியாகி நிரம்பி வழிகிறது.

ஹிஷாலினிக்கு வேலைத்தளத்தில் நெருக்குவாரங்கள் இருந்திருக்கலாம். அதில் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம். அதுவே அதிகமாக அவர் தற்கொலைக்கு போயிருக்கலாம். அந்த அழுத்தம் பாலியல் தொல்லையாக இருக்கலாம். அல்லது கடினமான கையாளுகையாக இருக்கலாம். அல்லது உடல்ரீதியான துன்புறுத்தலாக இருக்கலாம். அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு ஹிஷாலினி இந்த முடிவிற்கு போயிருக்கலாம். (அவர் தானே தீமூட்டிக்கொண்டதாக வைத்தியசாலையில் கூறியதாக தகவலுண்டு).

ஆனால், இதுவரை றிசாட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்த 11 பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி -இந்த விவகாரத்தின் வீரியத்தை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் என்பதை மிகத்தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது. அதனால், ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் தொடர்பிலான நம்பகத்தன்மையை பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. 

இதேநேரம், 

 ஈஸ்டர் குண்டு வெடிப்பினூடாக – கத்தோலிக்கர்களையும் முஸ்லிம்களையும் பிரித்த தந்திரத்தை போன்று, ஹிஷாலினியின் மரணத்தினூடாக – மலையக மக்களும் முஸ்லிம்களும் பிரிக்கப்படுகிறார்களா.என்ற கேள்வியும் எழுகின்றது.

எனவே, ஹிஷாலினியின் மரணம் தொடர்பான செய்திகளில் முஸ்லிம்கள் சற்று நிதானமடையுங்கள், நீதி கிடைக்கட்டும், ஆனால், யாரும் இதனை பயன்படுத்த உடந்தையாகிவிடாதீர்கள்!

 – ஏ.பி.எம்.அஸ்ஹர் –

Web Design by Srilanka Muslims Web Team