அச்சத்தை ஏற்படுத்தும் மத நிந்தனை கொலைகள் – பாக்கிஸ்தானில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் கொலை செய்யப்பட்டார் உடல் தீமூட்டப்பட்டது..!

Read Time:6 Minute, 28 Second

அல்ஜசீரா

இலங்கையின் தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர் கும்பல் ஒன்றினால் அடித்துக்கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் தீமூட்டப்பட்ட சம்பவத்தினை பாக்கிஸ்தான் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இது மத நிந்தனையுடன் தொடர்புபட்ட விடயம் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாக்கிஸ்தான் தலைநகரிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சியால்கோட்டில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பாக்கிஸ்தானில் மக்களை உணர்ச்சிவசப்படவைக்கும் தூண்டிவிடும் விவகாரங்களில் மத நிந்தனையே தற்போது முக்கியமானதாக காணப்படுகின்றது.
இஸ்லாத்திற்கு எதிரான அவமதிப்பு என்ற சிறிய குற்றச்சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டி கொலைகள இடம் பெறச்செய்கின்றது.

பாக்கிஸ்தான் பிரதமர் இந்த சம்பவத்தினை பாக்கிஸ்தானிற்கு அவமானகரமான நாள் என தெரிவித்துள்ளதுடன் இந்த கொலை குறித்த விசாரணைகளை தான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்துவருவதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் உணர்பூர்வமான தன்மை காரணமாக தன்னை பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சியால்கோட்டில் இஸ்லாமிய புனித வசனங்கள் எழுதப்பட்ட சுவரொட்டியை இலங்கையை சேர்ந்த நபர் கிழித்தார் என்ற மத நிந்தனை குற்றச்சாட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என விசாரணையாளர்கள் கருதுவதாக தெரிவித்தார்.

நிலத்தில் வீழ்ந்திருக்கும் நபரை மதநிந்தனைக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு பலர் தாக்குவதை காண்பிக்கும் கொடுரமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
அவரது உடல் தீயிட்டு கொழுத்தப்படுவதை ஏனைய வீடியோக்கள் காண்பித்துள்ளன. அவரது கார் தலைகீழாக கவிழ்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.
அந்த கும்பலில் காணப்பட்ட பலர் தங்கள் அடையாளங்களை மறைப்பதற்கான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை அவர்கள் எரிந்து கொண்டிருக்கின்ற உடலிற்கு முன்னால் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 50க்கும் அதிகமானவர்களைகைதுசெய்துள்ளதாக பாக்கிஸ்தான் அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார். சிசிடிவி வீடியோக்களை நாங்கள் உன்னிப்பாக ஆராய்கின்றோம் 48 மணித்தியாலத்திற்குள் விசாரணைகளை முடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வீடியோக்களில் ஒலித்த கோசங்கள் மதநிந்தனைக்கு எதிரான டிஎல்பி கட்சி பயன்படுத்திவருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

டில்எல்பி கட்சி கடந்த காலங்களில் மதநிந்தனைக்கு எதிரான போராட்டங்களின் மூலம் பாக்கிஸ்தானின் பல பகுதிகளை முடக்கியுள்ளது. கடந்த வருடம் பாரிசை சேர்ந்த சார்லி ஹெப்டோ முகமது நபியின் கேலிச்சித்திரமொன்றை பிரசுரித்ததை தொடர்ந்து இந்த கட்சி பிரான்சிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது. மதநிந்தனை தொடர்பில் கும்பல்கள் கொலைகளில் ஈடுபடுவது பாக்கிஸ்தானில் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவமாக மாறியுள்ளது. பாக்கிஸ்தானில் இந்த குற்றத்திற்காக மரண தண்டனையும் விதிக்கலாம்.

பாக்கிஸ்தான் பிரதமரின் மதங்களிற்கு இடையிலான விவகாரங்களிற்கான ஆலோசகரான தஹீர் அஸ்ரபி சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். இது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை – இஸ்லாத்தின் போதனைகளிற்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாக்கிஸ்தான் இலங்கை இராஜதந்திரிகளுடன் தொடர்பில் உள்ளது என பாக்கிஸ்தான் அதிகாரி ஒருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார். இந்த ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என உறுதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மதநிந்தனை குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட பகையை தீர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என தெரிவிக்கும் மனித உரிமை அமைப்புகள் சிறுபான்மையினத்தவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடுகின்றன.

துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலிற்கு உடனடியாக தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை இன்றைய சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு தெரிவித்துள்ளது.

Previous post எங்கள் வீட்டுக்கு வெளியிலேயே சமையல் எரிவாயு கொள்கலன் இருக்கின்றது..!
Next post இனமத பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பவேண்டும்; ஞானசார தேரர்..!