இரணைதீவு கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற நீரினால் சூழப்பட்ட கிராமம், இங்கு சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை கைவிட வேண்டும்.

Read Time:4 Minute, 2 Second

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இரணைதீவு என்பது கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற, நீரினால் சூழப்பட்ட ஒரு கிராமமாக உள்ளது. எனவே இங்கு சடலங்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்று இரணைதீவு பங்குத்தந்தை ம.பத்திநாதர் வலியுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இரணைதீவு என்பது கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் ஒரு கிராமமாக இருக்கின்றது. நான் இதனை மத அடிப்படையில் கூற விரும்பவில்லை. மாறாக அனைவரினதும் நலனுக்காகவே இதனைக் கூறுகின்றேன்.

இரணைதீவிலிருந்து 1992 ஆம் ஆண்டில் மக்கள் இடம்பெயர்ந்து வந்தார்கள். 2017 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் அவர்கள் மீண்டும் இரணைதீவில் குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு இன்னமும் ஒரு சுமுகமான நிலை ஏற்படவில்லை. இப்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு வசிக்கின்றார்கள்.

அத்தோடு மாதமொருமுறை அங்கு திருப்பலி இடம்பெறுவதுடன் கடந்த 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இரணைதீவில் தவக்கால தியானம் ஆரம்பமாகியுள்ளது. இவ்வாறிருக்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை பெரிதும் விசனமளிக்கிறது.

மேலும் இரணைதீவு என்பது சுற்றிவர நீரோட்டம் நிறைந்த தீவாக இருக்கின்றது. அத்தகைய தீவுகளில் சடலங்களை அடக்கம் செய்யும்போது கொவிட்-19 தொற்று இலகுவாகப் பரவக்கூடிய சாத்தியம் ஏற்படும். அத்தோடு அங்கு 135 அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

நாம் முஸ்லிம் சகோதரர்களை வெறுக்கவில்லை. எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காக சில இடங்களை முஸ்லிம் சமூகத்தினர் பரிந்துரை செய்திருந்தார்கள். ஆனால் அவற்றைக் கருத்திற்கொள்ளாமல், இரணைதீவை அரசாங்கம் தெரிவு செய்தமைக்கு நாம் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.

இந்த தீர்மானம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். இல்லாவிடின், அதற்கு எதிரான எமது போராட்டம் தொடரும் என்பதுடன் இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடளிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

Previous post இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிக்கிறது – கபிர் ஹசிம்
Next post கொள்ளையில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை