இலங்கை வந்துள்ள ஆன்மீகத் தலைவருக்கு கல்முனையில் வரவேற்பு!

Read Time:2 Minute, 0 Second

இலங்கை அரசாங்கத்தின் விசேட விருந்தினராக வருகை தந்திருகின்ற அருஸீய்யத்துல் காதிரிய்யாவின் சர்வதேச ஆன்மீக அமைப்பின் தலைவர், டொக்டர் அஹ்மத் நாஸிரை வரவேற்கும் நிகழ்வு, கல்முனை மாநகரத்தில் நேற்று (29) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீகத் தலைவருடன் வருகைதந்த  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் சமய பண்பாடு மற்றும் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மௌலானாவுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா சரீப் பள்ளிவாசலுக்கு வருகை தந்த ஆன்மீகத் தலைவர் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

பின்னர் கல்முனை பிரதான நகர் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட ஆன்மீகத் தலைவர், முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார். இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மஜ்லிஸிலும் கலந்துகொண்டார்.

அத்தோடு, கல்முனை முஹைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்கா பள்ளிவாசல் ஆகியவற்றின் சார்பாக  ஆன்மீக தலைவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம்  வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

Previous post மீண்டும் பயணத்தடை?
Next post கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு!