உக்ரைன் அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் 24 மணி நேரக் கெடு

Read Time:3 Minute, 37 Second

உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை ரஷ்யா தடுத்ததால் கடைசி நேரத்தில் அந்தத் திட்டத்திலிருந்து அந்நாட்டின் அதிபர் விக்டர் யனுகோவிச் பின்வாங்கினார். 15 பில்லியன் டாலர் பிணை எடுப்புத் தொகையுடன் கிடைத்திருக்ககூடிய வாய்ப்பினை இழந்ததால் பொதுமக்கள் தங்கள் ஆட்சேபங்களை எழுப்பத் தொடங்கினர்.

நவம்பர் 30-ம்தேதி நடைபெற்ற அமைதியான பேரணியை காவல்துறையினர் தடுத்தபோது வன்முறை வெடித்தது. அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயலவில்லை, எதிர்க்கட்சியினரும் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்பதைத் தொடர்ந்து தீவிர எதிர்ப்பாளர்கள் கலவரத்தினை அடக்கும் காவல்படையினருடன் தொடர்ந்து மோதல் போக்கையே வளர்த்துக்கொண்டனர்.

இரண்டு மாத காலமாகத் தொடரும் இந்தக் கடுமையான அரசியல் நெருக்கடிகளில் இரண்டு போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் ஏற்பட்ட கலவரத்தில் பலியாகினர். அமைதியாக நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களின் முதல் பலியாகக் கருதப்படும் இந்த மரணங்கள் அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் தினசரி ஆர்ப்பாட்டங்களில் வன்முறையை அதிகரிக்கக்கூடும் என்ற பயத்தை அவர்களிடையே தூண்டிவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைநகர் கீவின் மத்தியில் உள்ள தெருக்களில் கொழுந்துவிட்டு எரியும் டயர்களின் கரும்புகை சூழ கலவரத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை கலவரங்களை விடுத்து சுதந்திர சதுக்கத்தின் அருகிலுள்ள பிரதான எதிர்ப்பு முகாமில் அடுத்த 24 மணி நேரத்திற்கு குழுமியிருக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் அதிபர் யனுகோவிச்சை தீவிர வன்முறைகள் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த அரசு எதிர்ப்பு சட்டத்தினை ரத்து செய்யவும், அதிபர் பதவியிலிருந்து விலகி பொதுத் தேர்தலை நடத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆரம்பகால தேர்தல்களே இத்தகைய ரத்தம் சிந்தும் வன்முறைகளைத் தடுக்கும் என்றும், அதற்காக தாங்கள் அனைவரும் உழைக்கத் தயாராக உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். இதற்கு அதிபர் ஒப்புக் கொள்ளமறுத்தால் ரத்தம் சிந்த நேரிடும்போதும் தங்களின் போராட்டம் நேர்மையான, நியாயமான, துணிச்சலான வழியில் நாளையும் தொடரும் என்று மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான அர்செனி யட்சென்யுக் குறிப்பிட்டுள்ளார்.

Previous post அமைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கையொப்பமிட்டதாக போலிக் குற்றச்சாட்டு -வவுனியா மாவட்ட இனநல்லுறவு ஒன்றியம்
Next post இலங்கைக்கு G-77 நாடுகள் குழுவின் தலைமை பதவி