கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியின் பெயரை உத்தியோகபூர்வமாக சூட்ட சபையில் அங்கிகாராம்

Read Time:11 Minute, 25 Second

-எஸ்.அஷ்ரப்கான்-

கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியின் பெயரை உத்தியோகபூர்வமாக சூட்டி-
வர்த்தமானி பிரகடனம் செய்வது தொடர்பில் கல்முனை மாநகர சபையில் பிரேரணை
ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

 
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று (21) செவ்வாய்க்கிழமை
மாலை மாநகர மேயர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் தலைமையில்
நடைபெற்றபோது இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

 
இப்பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தின்போது தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் குறித்த வீதிக்கு மேற்படி பெயரை
சூட்டுவதற்கு உடன்பட முடியாது எனத் தெரிவித்துடன் தமது எதிர்ப்பையும்
வெளியிட்டனர். குருகிய காலத்திற்குள் எடுக்கப்பட்ட முடிவு என்றும் இதனால்
இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கால அவகாசம்
இதுவிடயத்தில் தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 
இதேவேளை ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் இப்பெயர் சூட்டப்படுவதற்கான நியாயமான
கோரிக்கைகளையும், வரலாற்று உண்மைகளையும் குறிப்பிட்டு ஆதரவான கருத்துகளை
முன்வைத்தனர்.

 
கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியின் பெயரை உத்தியோகபூர்வமாக சூட்டி,
வர்த்தமானி பிரகடனம் செய்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில்
கலந்து கொண்டு உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களை
இங்கு தொகுத்துத்தருகிறோம்.

 
இதுவிடயமாக சபை அமர்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்
அமிர்தலிங்கம் உரையாற்றும்போது,
இந்த வீதி தரவைப்பிள்ளையார் ஆலய வீதி என்றும் அதுபோல் தற்போது
நடைமுறையில் கடற்கரைப்பள்ளி வீதி என்றும் இருக்கின்றது.

 

நாம் இதனை ஜனநாயக
அடிப்டையில் கோயில் நிர்வாகத்தினரும், பள்ளிவாயல் நிர்வாகத்தினரும்
இணைந்து பேசியே சுமுகமான தீர்வை பெற வேண்டும். அதற்காக முட்டி
மோதிக்கொள்ள முடியாது. இதுவிடயமாக கால அவகாசம் வேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து உறுப்பினர் ஜெயகுமார் உரையாற்றும்போது,
மாநகர சபை கட்டளைச்சட்டத்திற்கு முரனான இந்த பிரேரணை முற்றாக நீக்கப்பட
வேண்டும்.

 

ஜனநாயக ரீதியற்ற இந்த பிரேரணையை நாம் ஒருபோதும்
ஆதரிக்கமாட்டோம். நாங்கள் மக்கள் மத்தியில் இந்த விடயங்களை கொண்டுசெல்ல
வேண்டும். அதற்கான கால அவகாசம் எமக்கு வேண்டும் என்றார்.

 
அதனைத்தொடர்ந்து உறுப்பினர் அமீர் உரையாற்றும்போது,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குறிப்படும்போது ஜனநாயகம்
இல்லாத ஒரு பிரேரணை என்று பேசினார்கள். சபை அமர்விற்கு ஒரு விடயம்
வெளிப்படையாக பிரேரணையாக கொண்டுவரப்படுகிறது என்றால் அதில் எவ்வித ஒழிவு
மறைவுகளும் இல்லை என்றே பொருள்.

 

 

எனவே ஒரு பிரதேச இன மக்கள் சார்ந்த
விடயத்தை அவர்களது நியாயத்தை எங்கு ஜனநாயக முறைப்படி கொண்டுவர முடியுமோ
அந்த இடத்திற்கே அப்பிரதேசவாசிகள் நியாயமாக சிந்தித்து சகல
ஆதாரங்களுடனும் கொண்டுவந்திருக்கின்றார்கள்.

 

 

ஜனநாயகம்
பற்றிப்பேசுவதென்றால் பொத்துவில் தொடக்கம் வட மாகாணத்தின் கடைசி எல்லை
வரை நாம் பேச வேண்டிவரும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
நடைமுறையில் இருக்கின்ற கடற்கரைப்பள்ளி என்ற பெயரை உத்தியோகபூர்வமாகச்
சூட்டி அதனை வர்த்தமானிப்பிரகடனம் செய்து தருமாறு எங்களை இந்த இடத்திற்கு
அனுப்பிவைத்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

 

அதற்காக இந்த விடயத்தைகட்சி பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

 

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும்
என்று வேண்டுகின்றேன் என்றார்.
தொடர்ந்தும் அவையில் உரையாற்றிய உறுப்பினர் றியாஸ் தனதுரையின்போது,
நான் இந்த வீதியின் பெயர் விடயமாக தனக்குள் யோசித்துக்கொண்டேன். இந்த
வீதியை இரு சமூகங்களையும் இணைத்த நல்லுறவு வீதி என்ற பொருந்திக்கொள்வதா ?
என்று அப்போதுதான் எனக்கு இந்த வீதியின் வரலாறு அடங்கிய புத்தகம் எனக்கு
கிடைத்தது. உண்மையில் இந்த வீதியின் முடிவில் கடற்கரைப்பள்ளிவாயல் ஒன்று
பல ஆண்டுகாலத்திற்கு முன்பு எப்போது உருவாக்கப்பட்டதோ அப்போதிருந்தே
இவ்வீதி கடற்கரைப்பள்ளி வீதி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

 
அதுமட்டுமல்ல, இப்பிரதேசவாசிகளின் அடையாள அட்டை, மின்சாரப்பட்டியல்,
போன்ற சகல ஆவணங்களிலும் இப்பெயரே குறிப்பிடப்படுகிறது. அரச உயர்
அதிகாரிகளும் இதற்கு சான்று பகர்கின்றார்கள். எனவேதான் இதனை நாம் நியாயம்
எனக்கருதி ஆதரிக்க முன்வருகிறோம் என்றார்.

 
இதனைத்தொடரந்து உறுப்பினர் விஜயரட்ணம் உரையாற்றுகையில் எந்த விடயத்தை
நோக்கினாலும் கல்முனை மாநகர சபையை எடுத்துக்கொண்டால் விகிதாசாரம்
பேணப்படுவதில்லை. மின் குமிழில்கூட உரியபங்கு வழங்கப்படுவதில்லை. கல்முனை
மாநகர சபை தமிழ் பிரதிநிதிகளான எங்களை புறக்கணித்தே வருகிறது. கல்முனை
தமிழ் பிரதேச செயலக விடயத்திலும் அவ்வாறே இடம்பெறுகிறது.

 

உங்களைச்
சார்ந்த கட்சி பெரும்தடையாக உள்ளது. எனவேதான் எங்களுடைய கருத்துக்களும்
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதனால் இந்த விடயத்திற்கு எம்மால் ஆதரவளிக்க
முடியாது என்று குறிப்பிட்டார்.

 
இதற்கு பதிலளித்து உரையாற்றிய உறுப்பினர் பஷீர்,
தங்களின் குற்றச்சாட்டை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். எமது ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிராக
நடக்கின்ற கட்சியல்ல. நாம் ஒருபோதும் தமிழ் சமூகத்திற்கு வருகின்ற எந்த
உரிமையையும் தட்டிப்பறிக்கவில்லை.

 

 

தமிழர்களுக்கான தனிப்பிரதேச சபையை நாம்
ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஒரு விடயத்தில் சரியான அறிவு இல்லாமல் சக
உறுப்பினர் பேச முனையக்கூடாது. காரைதீவு, நாவிதன்வெளி போன்ற பல
சபைகளிலுள்ள முஸ்லிம்கள் இன்றுவரை பொறுமையாக தமிழினத்தோடு இணைந்து
ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

 
இதனைத்தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலான உறுப்பினர்
றஹ்மான், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் முபீத், மற்றும்
ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்களான சாலிதீன்,
பறக்கத்துள்ளாஹ், பிர்தௌஸ், உமர் அலி, முஸ்தபா, நபார் ஆகியோரும் ஆதரவாக
உரையாற்றினர்.

 
இறுதியில் முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உரையாற்றும்போது,
மாநகர சபை கட்டளைச்சட்டம் 71வது பிரிவின்படி பெயர் சூட்டுதல் என்ற விடயம்
உள்ளுராட்சி மாகாண சபையிடம்தான் அதிகாரம் உள்ளது. எனவே இந்த விடயத்தில்
இறுதி முடிவெடுக்கும் அதிகாரமுள்ள இடத்திற்கு சபையினால்
வர்த்தமானிப்பிரகடனத்திற்காக அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

 

அதற்கு முன்னர்
ஜனநாயக அடிப்படையில் மக்களின் கருத்துக்களைப்பெற்றுக்கொள்வதற்காக 21
நாட்கள் கால அவகாசம் வழங்குகின்றோம். இந்த 21 நாள் அவகாசத்திற்குள்
கிடைக்கப் பெறுகின்ற மாற்றுக் கருத்துகள் குறித்து அடுத்த சபை அமர்வில்
ஆராயந்துவிட்டு அதனைத் தொடர்ந்தே குறித்த பெயரை வர்த்தமானி பிரகடனம்
செய்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும்
இதன்போது முதல்வர் நிசாம் காரியப்பர் சபைக்கு அறிவித்தார்.

 
இந்நிலையில் குறித்த பெயர் சூட்டும் பிரேரணை முன்மொழிவுக்கு அங்கீகாரம்
வழங்கிய சபை, இது தொடர்பில் பொது மக்களின்
கருத்துக்களைப்பெற்றுக்கொள்வதற்காக 21 நாள் கால அவகாசம் வழங்குவது எனவும்
தீர்மானித்தது. முதல்வரின் இந்த அறிவிப்பை சபை ஏகமனதாக ஏற்றுக்
கொண்டது

Previous post அக்கரைப்பற்று சேர் ராசீக் பரீட் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா
Next post ரோலர் இயந்திரத்தில் சிக்கி 9 வயது மாணவன் உயிரிழப்பு;ஆனந்த கல்லூரியில் நடந்த சோக சம்பவத்தின் முழுவிபரம்