சர்ச்சைக் கருத்தால் சர்ச்சைக்கு ஆளான ஹரின் பெர்னான்டோ – மாலைதீவிடம் மன்னிப்பு கோரினார்!

Read Time:3 Minute, 32 Second

தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ மாலைதீவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அண்மையில் ஜேர்மனி பெர்லினில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஹரின் மாலைதீவு மற்றும் அதன் சுற்றுலாத்தளங்களைப் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

”மாலைதீவைக் காட்டிலும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழங்க இலங்கையிடம் பல வளங்கள் உள்ளன. மாலைதீவுக்கு அதிகளவானோர் செல்கிறார்கள் என எனக்குத் தெரியும். மாலைதீவிடம் வெறும் கடல்கள் மட்டும் தான் உள்ளன. நான் அதை விமர்சிக்கவில்லை. ஆனால் ஐந்து நாட்கள் அங்கே இருந்தால் நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். ஒரு தீவில் சிக்கிக் கொண்டதைப் போல் உணர்வீர்கள்” என்ற அமைச்சரின் கருத்து மாலைதீவு பிரஜைகள் மற்றும் அரசியல் வாதிகளின் கோபத்திற்கு ஆளானது.

”உங்களுக்கு நீச்சலடிக்கத் தெரியாவிட்டால், உயிர்ப்பல்வகைமை பற்றித் தெரியாவிட்டால், ஆகக்குறைந்தது நான்கு சகாப்தங்கள் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழும் ஒரு நாகரீகத்தில் ஆர்வமில்லாதவர் என்றால் நிச்சயமாக நீங்கள் ஐந்து நாட்டகளில் சலிப்படைவீர்கள் தான்” என ஐ.நா வின் விசேட முன்னாள் அறிக்கையாளர் அஹமட் ஷாகீட் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதே சமயத்தில் மாலைதீவு பாராளுமன்ற உறுப்பினரான மொஹமட் ஷிபா ”இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சரை எனது நாட்டிற்கு வந்து உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பலை அனுபவிக்குமாறும் மற்றும் வெண்மணலையும் வண்ணமயமான பவளப்பாறைகளையும் அழகான நீலக் கடற்கரையையும்  கண்டு களிக்குமாறு அழைப்பு விடுக்கின்றேன். அத்தோடு இவற்றையெல்லாம் பார்வையிட உங்களுக்குப் போதுமான நேரம் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ”அழகிய மாலைதீவுகளைப் பற்றி பெர்லினில் நான்  தெரிவித்த கருத்து ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையில் நாம் அண்டை நாடுகளுடன் இணைந்து செயற்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது தொடர்பில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கோருகிறேன்” என அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கோரி பதிவிட்டுள்ளார்.

Previous post டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – அனுர!
Next post சரணடைந்தார் விமல் வீரவன்ச!