
சவூதயில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை
(bbc)
சவுதியில் தொழில்செய்துவந்த இலங்கையர்களின் நிலை என்ன, அவர்களில் எத்தனை பேருக்கு குறிப்பிட்ட பொது மன்னிப்புக் காலத்துக்குள் நாடுதிரும்ப முடிந்துள்ளது என்று ஜெட்டாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் எம்.பி.எம். ஸரூக் அவர்களிடம் தமிழோசை கேட்டது.
ஜெட்டாவில் பகுதியிலிருந்து நாடு திரும்புவதற்கு ஜித்தா துணைத் தூதரகத்தில் சுமார் 10,500 பேர் வரையிலான இலங்கையர்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும், அவர்களில் நாடு திரும்பியவர்கள் போக 1200 பேர் வரையில் எஞ்சியுள்ளதாகவும் எம்.பி.எம். ஸரூக் கூறினார்.
2007-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த சட்டப்படி சவுதிக்குள் வந்த 700 பேருக்கு மன்னிப்புக் காலம் பொருந்தாது என்றும் அவர்களில் ஹஜ் பயணமாக வந்துள்ள சிலரும் அடங்குவதாகவும் எம்.பி.எம். ஸரூக் கூறினார்.
இதுதவிர, ரியாத் பகுதியிலும் 8000க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும், அவர்களில் பலர் நாடு திரும்பிவிட்டதாகவும், சவுதியின் கிழக்கே உள்ள தம்மாம் பகுதியிலிருந்து பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ஜெட்டாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் எம்.பி.எம். ஸரூக் தெரிவித்தார்.
ஜெட்டா பாலத்தின் கீழே கடந்த காலங்களில் தங்கியிருந்தவர்களில் பொதுமன்னிப்புக்கு உட்படாத 35 இலங்கையர்கள் மட்டுமே இப்போது இருப்பதாகவும் ஸரூக் கூறினார்.
நேற்று திங்கட்கிழமை முதல் சவுதியில் நடந்துவரும் தேடுதல்களில் ஜெட்டா பகுதியில் இலங்கையர்கள் இருவர் பிடிபட்டுள்ளதாகவும் அப்படி பிடிபடுபவர்களை 48 மணிநேரத்துக்குள் சொந்த நாட்டுக்கு அனுப்ப சவுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜெட்டாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் எம்.பி.எம். ஸரூக் தெரிவித்தார்.