
திருக்கோவில் வட்டமடு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு – ஏ.எல்.தவம்
அம்பாரை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு விவசாயக்காணி தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி (19.11.2013) முடிவுகாணப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
சுமார் ஒரு மாதகாலமாக வட்டமடு விவசாயக்காணிகளில் இப் போகத்திற்கான விவசாயச் செய்கை பண்ண முடியாமல் விவசாய்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவருகின்றனர். இப் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகிய நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும், நீதி அமைச்சருமான ரஊப் ஹக்கீமின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுவந்ததை தொடர்ந்து சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவை, அமைச்சர் ஹக்கீம் நேரடியாக சந்தித்து பேசியதற்கிணங்க எதிர்வரும் 19ஆம் திகதி உரிய அதிகாரிகளுடன் திருகோணமலைக்கு விஜயம் செய்து அன்றைய தினம் வட்டமடு விவசாயக் காணிப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
விவசாயச் செய்கைக்குரிய காணிகள் விவசாயச் செய்கைக்கும், மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியுடன் மேலதிகமாக தேவைப்படும் பட்சத்தில் அதனை ஒதுக்கித்தர இணக்கம் தெரிவித்ததாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மேலும் தெரிவித்தார்.