நாம் ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலை ஏற்படும்: பொதுபலசேனா

Read Time:2 Minute, 39 Second

Pothupalasena1

(உதயன்)

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லும் அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசைத் தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என இந்தியா தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் கைப்பாவையாக அரசு செயற்பட்டால் நாமும் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அபாய நிலை ஏற்படும் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் வண.கலபொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியாவின் பேச்சைக் கேட்டு அரசு முட்டாள்தனமாக செயற்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற் செல்லும் தீர்வுக்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு:

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் சர்வதேச நாடுகளும், இந்தியாவும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பதை நாம் எதிர்க்கிறோம். இது விடயத்தில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. இனப்பிரச்சினைத் தீர்வு என்ற ய பயரில் அரசு முன்னெடுக்கும் முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கு நாம்தான் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்.

இனப்பிரச்சினை என்று கூறிக்கொண்டு சிறுபான்மையின சமூகம் முன்னெடுக்கும் தேவையற்ற நடவடிக்கைகளால் வரலாற்றுத் தொன்மைமிக்க பெரும்பான்மை இனமான எமது பெளத்த இனமே பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இதற்கு நாம் இனிமேலும் இடமளிக்கமாட்டோம். 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரான பெளத்த, சிங்கள அமைப்பினூடாக நாம் எமது நடவடிக்கைகளை ஆரம்பித்து ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Previous post அவுஸ்திரேலிய அணியை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது: றோகித் சர்மா
Next post 9 பிரதி அமைச்சர்கள் நியமனம்