பல்துறை கலைஞராக திகழும் ஊடகவியலாளர் சத்தார்!

Read Time:5 Minute, 54 Second

பல கலைகள் தெரிந்த பத்திரிகையாளராக ஏ.எல்.எம். சத்தார் (சபீக்) திகழ்கிறார். ஊடகத்துறை, சிறுகதை, சிறுவர் நாவல், துப்பறியும் நாவல், கவிதை, புகைப்படத் துறை, கட்டடக்கலை, தச்சுத் தொழில், கைப்பணி என்று சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கலைகளுக்கு சொந்தக்காரனாக பிரகாசிக்கும் இவரால் இன்று கலையுலகம் பெருமை கொள்கிறது.

இவர் இரத்தினபுரி அப்துல் லத்தீப்_- பாணந்துறை ஹாஜியானி சித்தி பாத்திமா தம்பதியின் மூன்றாவது புதல்வனாக 1951 பெப்ரவரி 14ஆம் திகதி பாணந்துறை, ஹேனமுல்லையில் பிறந்தார். ஜீலான் தேசிய பாடசாலையாக விளங்கும் ஹேனமுல்லை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 1956 இல் இணைந்து, கீழ்ப்பிரிவு வகுப்பில் கல்வியைத் தொடர்ந்தார். அன்று ஜீலானியில் உயர்தர வகுப்பு இல்லாததால் வெளியூர் பாடசாலைக்குச் சென்று கற்பதில் வசதிக் குறைவால் மேற்படிப்பைத் தொடர்வதில் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர்.

1976 ஆம் ஆண்டில் கொழும்பு மருதானையில் உள்ள சமூக நிறுவனம் ஒன்றில் (ஜமா அதே இஸ்ஸாமி) வேலைக்கமர்ந்தார். அங்கு வெளியிடப்படும் அல்ஹஸனாத் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்து பத்திரிகைத்துறை பயணத்தை ஆரம்பித்தார். அதன் போது ஏ.எல். படிக்கும் தனது சகோதரனின் பாடக்குறிப்புக் கொப்பிகளை எடுத்துச் சென்று வாசிப்பதன் மூலம் சுயமாகப் படித்து ஏ.எல். பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தார்.

பின்னர் உதயம், எழுச்சிக் குரல், தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகை நிறுவனங்களிலும் இணைந்து பணியாற்றியுள்ளார். 1987ஆம் ஆண்டு கூலித் தொழிலாளியாக மத்திய கிழக்குக்குப் பயணமானார். தனக்கிருக்கும் பத்திரிகை தாகம் காரணமாக அங்கு அரபு மண்ணில் இருந்து வெளிவரும் ‘முதலாவது தமிழ் மாத இதழ்’ என்ற சுலோகத்தோடு ‘அல் அஸ்லம்’ கையெழுத்து மாதப் பத்திரிகையை சுமார் இரண்டரை வருடங்கள் தொடராக வெளியிட்டார். அங்கிருந்து 1994 இல் நாடு திரும்பிய பின்னர் தினகரன் செய்தியாளராக பணியாற்றினார். பின்னர் 1997 இல் நவமணி பத்திரிகையில் இணைந்து, செய்தி ஆசிரியர், விவரண ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்தார். கருத்துக்களம், சிறுகதை, கவிதைப் பகுதி, மருத்துவப் பகுதி, நகைச்சுவை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பொறுப்பாளராக இருந்து பணியாற்றினார்.

அதன் மூலம் இளம் எழுத்தாளர்கள் உருவாகவும் வளரும் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கவும் பரந்த மனதுடன் செயற்பட்டார். பத்திரிகை உலகில் அல் அஸ்லம், பரியாரி, ஈழ மித்திரன், ஞானியார், சபீரா, சபீக் உள்ளிட்ட புனைப் பெயர்களிலேயே ஆக்கங்கள் எழுதியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ‘செரண்டிப்’ தினசரி வெளிவந்த போது அதன் உதவியாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 2016ஆம் ஆண்டு விடிவெள்ளி பத்திரிகையில் இணைந்து உதவி ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். சமுதாயம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், சமூகத்திற்குத் தேவையான சிங்கள ஆக்கங்களின் மொழிபெயர்ப்புகள் போன்ற விடயதானங்களை எழுதி வாசகர்களின் நன்மதிப்புக்குரியவராக விளங்கினார். இவரால் எழுதப்பட்ட சிறுவர் நாவல்கள், உருவகக்கதைகள், அறிவியல் ஆக்கங்கள் பலவும் அச்சு வாகனம் ஏறக் காத்திருப்பதாக இவர் கூறுகிறார். தினகரன், அல்ஹஸனாத், எழுச்சிக் குரல், தினபதி – சிந்தாமணி, நவமணி, விடிவெள்ளி உள்ளிட்ட பத்திரிகைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இவரது பலதரப்பட்ட ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

பாணந்துறை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் 2003ஆம் ஆண்டு இவருக்கு ‘சொல்லின் செல்வன்’ பட்டமும் இஸ்லாமிய பேரவை இலக்கிய வட்டம் 2018ஆம் ஆண்டு ‘ஊடகத்தாரை’ பட்டமும் வழங்கி இவரை கௌரவித்தன. 2012 ஆம் ஆண்டு பேருவளை தினகரன் வாரமஞ்சரி வாசகர் வட்டம் இவரது ஊடக பணிகளைப் பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. அகில இன நல்லுறவு ஒன்றியத்தால் 2003ஆம் ஆண்டு ‘சாமஸ்ரீ சேவைச் செம்மல்’ பட்டம் பட்டமும் மலையக கலைஞர் முன்னணியால் 2002ஆம் ஆண்டு ‘இரத்தின தீபம்’ விருதும் இலங்கை கலைஞர் முன்னணியால் 2005 ஆம் ஆண்டு ‘எழுத்தியல் நாயகன்’ பட்டமும் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

பேருவளை பீ.எம்.முக்தார்
Previous post மொனராகலை ஜும்ஆ பள்ளிவாசலின் மௌலவிக்கு 3 வருடங்களின் பின்னர் விடுதலை!
Next post ‘ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்; கைது வேட்டையை அரசு உடன் நிறுத்த வேண்டும்’ – சுமந்திரன்!