
பிரதிக் கல்விப் பணிப்பாளர், பிரதி அதிபர் பிணையில் விடுதலை
-எஸ்.எம்.எம்.ரம்ஸான்
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர் இன்று புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளரிருக்கும் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் ஆகியோருக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் தன்மீது தாக்குல் நடத்தியதாக பிரதி அதிபர் ஏ.கபூர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் பிரதி அதிபர் கபூர் தாக்குதல் நடத்தியதாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் குறித்த இரண்டு பேரையும் கல்முனை நீதவான் ஏ.ஜுட்சன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இருவரையும் கைது செய்து வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதி அதிபர் ஆகிய இருவரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்ய கல்முனை நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நம்வம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.tm