மின்சார சபையின் கவன ஈனத்தால் சஹாப்தீன் மரணம்

Read Time:2 Minute, 58 Second

இலங்கை மின்சார சபையின் கவன ஈனத்தால் அப்பாவி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது. காக்காமுனை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான எம்.ஏ.சஹாப்தீன் (26வயது) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

மேசன் தொழிலாளியான இவர் கிண்ணியா முஸ்லீம் மகளிர் மகா வித்தியாலய மாடிக் கட்டிடத்தில் கடந்த 8 ஆம் திகதி வேலை செய்து கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் உயர் மின் சக்தி கொண்ட மின் கம்பியில் இவரது உபகரணம் பட்டு மின் தாக்குதலுக்கு உள்ளாகி தூக்கி வீசப் பட்டார்.

சுமார் ஒரு வார காலம் கோமா நிலையில் வைத்தியசாலையில் இருந்த பின்பே இவர் காலமானார்.

பாடசாலை மாடிக் கட்டடத்திட்கு அருகில் உயர் சக்தி கொண்ட மின் கம்பிகளை எவ்வித பாதுகாப்பும் அற்ற நிலையில் மின்சார சபை வைத்திருந்ததே இந்த விபத்திற்கு காரணமாகும். இதே போன்ற விபத்து பாடசாலை மாணவிகளுக்கும் கூட ஏட்படலாம் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணையை மேற்கொண்ட திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா சம்பவம் இடம் பெற்ற இடத்தை பார்வையிடுவதற்கு சென்றதுடன் பொதுமக்களிடம் மரணம் தொடர்பில் சந்தேகம் இருக்கின்றதா என கேட்டபோது மின்சார சபையின் உயர் மின் சக்தி கொண்ட கம்பி பாதுகாப்பற்ற விதத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பாடசாலை அதிபர் மற்றும் இலங்கை மின்சார சபையினரை அவ்விடத்திற்கு அழைத்து இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடை பெறாமல் இருக்கும் பட்ஷத்தில் நீதிமன்றிற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

எனவே இதற்கான பொறுப்புகளை மின்சார சபையே ஏற்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு மின்சார சபை நட்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் பொது மக்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

Previous post சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ ச‌பையை ரணிலிடம் பேசி பெற்றுத் தருமாறு இம்ரானிடம் முகா தூது அனுப்பியுள்ளது – உல‌மா க‌ட்சி
Next post மன்னார் மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி!