ஏ.எச்.ஏ. ஹுஸைன்
முன்பள்ளி ஆசிரியர்களின் முன்னேற்றத்தில் கரிசனை கொள்வதோடு அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நாலாயிரம் ரூபாய் கொடுப்பனவை ஆறாயிரமாக அதிகரித்து பணியில் நிரந்தரமாக்குமாறு முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்தார்.
கிராமிய பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டத்தின் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றபொழுது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இராஜாங்க அமைச்சர்களான எஸ். வியாழேந்திரன், ரொசான் லால் சிங்ஹ பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முன்பள்ளி இராஜாங்க அமைச்சர் நிஸாந்த டீ சில்வா உட்பட மேலும் பல இராஜாங்க அமைச்சர்களும் அவ்வமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் சுமார் கிழக்கு மாகாணத்தில் சுமார் 4500 பேர் முன்பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறார்கள் இவர்கள் கடந்த 3 தசாப்தத்துக்கு மேற்பட்ட ஆயுத முரண்பாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்திலிருந்தே எந்தவிதமான நிரந்தரக் கொடுப்பனவுமின்றி தங்களைத் தியாகம் செய்து பணியாற்றி வந்திருக்கின்றார்கள். நான் கிழக்கு மாகாண சபை நிருவாகத்தைப் பொறுப்பேற்று முதலமைச்சராகியவுடன்இவர்களுக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபாய் நிரந்தரக் கொடுப்பனவு வழங்கும் நடைமுறையைக் கொண்டு வந்தேன்.
ஆயினும் அவர்களது சேவைக்கு இந்த மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவு எந்தவிதத்திலும் போதுமானதல்ல. எனவே இந்த மாதாந்தக் கொடுப்பனவை குறைந்தது 6000 ரூபாய் என்ற அடிப்படையிலாவது அதிகரிக்க வேண்டும்.
அத்துடன் நின்று விடாது ஒரு இலட்சம் பேருக்கு அரச நியமனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த முன்பள்ளி ஆசிரிரயர்களையும் உள்வாங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்” என்றார்.
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை ஆறாயிரமாக அதிகரித்து பணியில் நிரந்தரமாக்குமாறு முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸிர் அஹமட் வேண்டுகோள்

Read Time:3 Minute, 18 Second