
முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி – ஹஸனலி!
இந்நாட்டு முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிப்பதற்காக இனவாத அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கான வேலைத்திட்டங்களும் பொத்துவில் மண்ணிலேயே இடம்பெற்று வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான எம்.ரி.ஹஸனலி தெரிவித்தார்.
பொத்துவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கை கொடுத்தது. அப்போது நாம் அரசுடன் சில ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டோம். ஆனால் அரசாங்கம் வாக்களித்தபடி எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எங்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறது.
அதேவேளை பொத்துவில் பிரதேசத்தை ஆக்கிரமித்து பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களை சிறுபான்மையினர்களாக மாற்றுவதே அரசின் நோக்கமாகவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்தவே அரசு சதித்திட்டம் தீட்டுகிறது. இவற்றை முறியடிக்கும் முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. எனவே பொத்துவில் பிரதேச முஸ்லிம்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் எங்களது கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும். இல்லையேல் வடமாகாணத்துடன் இணைந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் எனவும் கூறினார்.
-vidi