யாழில் சடலமாக மீட்கப்பட்ட முஸ்லிம் இளைஞன் : கொலையென பெற்றோர்கள் சந்தேகம் தெரிவிப்பு

Read Time:4 Minute, 41 Second

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நஞ்சு கலந்த பதார்த்தம் ஒன்றினை உட்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(18) இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த இளைஞனது ஜனாசா(சடலம்) அன்றிரவு யாழ்.சோனகத்தெரு சின்னப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கோட்டைப் பகுதியில் உள்ள முற்றைவெளி பகுதி ஆள் நடமாட்டமற்ற காணியில் காலை மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக பல தரப்பினர் மற்றும் உறவினர்களால் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சடலமாக அவ்விளைஞன் மீட்கப்பட்ட போது வாயினால் நுரை தள்ளிபடி மயங்கி காணப்பட்டதாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவர்கள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக அறிந்த அப்பகுதி கிராம சேவையாளர் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இளைஞனது உறவினருக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை இறந்தவர் போதைப் பொருளுக்கு அடிமையானவன் எனவும் அதிகளவு போதைப் பொருளை உட்கொண்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் மற்றுமொரு தரப்பு இறந்தவர் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்ட போதிலும் தற்போது அவற்றை விட்டு விட்டு மார்க்க கடமையுடன் காணப்பட்டதாக கூறுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க வாயினால் நுரை தள்ளிபடி மயங்கி இறந்தவர் 19 வயதுடைய ஜே 86 கிராம சேவகர் பிரிவினை சேர்ந்த பச்சைப் பள்ளி வீதியில் வசித்த முஹமது ஜாஸீன் அஸ்வர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் குறித்த இளைஞனது மரணம் எங்கு இடம்பெற்றது எப்படி அவர் இறந்தார் இறக்கும் போது என்ன நிலையில் காணப்பட்டார் என்ற விடயங்கள் தொடர்பில் முன்னுக்கு பின்னான முரண்பாடுகளே காணப்பட்டது.

மேலும் கடந்த மாதங்களாக குறித்த இளைஞன் சகல சட்டவிரோத செயல்களையும் கைவிட்டு மார்க்கம் தொடர்பிலான செயலில் ஈடுபட்டு வந்ததாக மற்றுமொரு தகவலும் வெளியாகி இருந்தது.

அத்துடன் பொலிஸ் தரப்பில் உள்ள அதிகாரிகள் இறந்த இளைஞன் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த இளைஞனது பெற்றோர்கள் தனது பிள்ளை எவ்வித பிரச்சினைகளுக்கும் செல்லாதவர் எனவும் அவரை யாரோ திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக யாழ் கோட்டைப்பகுதி ஐந்து சந்திப்பகுதி ஆறுகால் மடம் பகுதிகளில் போதை தரும் பாக்குகள் மாவா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறதை காண முடிகின்றது.

(இவருடைய மரண வாழ்வுக்காக நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்)

Previous post திருகோணமலை மாவட்ட கிராமிய அபிவிருத்திக்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு
Next post இஸ்ரேல் சிறைகளில் 1500 பாலஸ்தீன கைதிகள் தொடர் உண்ணாவிரதம்