வரி விதிப்பிற்கான ஆர்ப்பாட்டங்கள் நியாயமானதா? அரசியல்வாதிகளின் சுகபோகங்கள் குறைந்துள்ளதா?

Read Time:5 Minute, 51 Second

இலங்கையில் மீண்டும் பல வடிவங்களில் ஆர்ப்பாட்டங்கள் கருக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. மிக விரைவில் பாரியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை இலங்கை சந்திக்க நேரிடும். தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள் பலவற்றில் நியாயத் தன்மைகள் மலிந்துள்ளன. நியாயமற்ற ஆர்ப்பாட்டங்களும் இல்லாமலில்லை என்பதை நாம் நினைவில் கொள்தல் வேண்டும். ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சம்பளத்தின் மீதான வரி விதிப்பு நியாயமானதா என பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை பற்றி பாரிய விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. அது யாவரும் அறிந்த ஒன்றே! மூ வேளை உண்ண உணவில்லாமல் எத்தனையோ நபர்கள் உள்ளனர். பட்டினி சாவை எதிர்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேர ஆரம்பித்துள்ளன. இந் நிலை, என்ன விலை கொடுத்தாவது சீர் செய்யப்படல் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்காது. இந் நிலையிலிருந்து மீள சில தியாகங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அப்படியான தியாகங்களில் ஒன்றே இவ் வரி விதிப்பை ஏற்றலாகும்.

மக்கள் பட்டினி சாவை எதிர்கொண்டுள்ள ஒரு நாட்டில், ஒரு ஊழியருக்கு ஒரு இலட்சம் சம்பளம் வழங்குவது புதுமையானது. ஒரு இலட்சம் சம்பளம் கொடுக்கும் நிலையில் நாடில்லை. இதுவே உண்மை. ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் எடுக்கும் ஒருவர், ஏழை மக்களுக்கு இந் நிலையில் ஒரு குறித்த சிறு தொகையை உதவவில்லை என்றால், அவர் மனிதனாகவே இரிக்க முடியாது. அவ்வாறு உதவும் தொகையையே அரசு வரியாக அறவிடுகிறது. அவர்களுடையே ஆடம்பர செலவாகவே வரியாக அறவீடு செய்யும் பணம் இருக்கும். நாடு சீராகும் வரை அனைவரும் தியாகங்கள் செய்ய தயாராகவே இருக்க வேண்டும். வேறு வழி இல்லை.

இவ் வரி விதிப்பானது IMF இன் நிபந்தனைகளில் ஒன்று. இதனை செய்யவே அரசு தயங்கி தயங்கி நின்றது. இதனை செய்யாமல் IMF இடம் இலங்கை செல்லவும் முடியாது. இன்று இலங்கைக்குள்ள ஒரே நம்பிக்கை IMF ஆகும். நாட்டை மீட்கும் போராட்டத்தில் இவ் வரி விதிப்பானது தவிர்க்க முடியாதது எனலாம். IMF இற்கும் இலங்கையில் ஒரு இலட்சத்துக்கு அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கும் இடையில் ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினை உள்ளதா? அவர்களின் நிபந்தனைகளானது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதை அடிப்படையாக கொண்டதாகும். அது சிலவேளை கசப்பாக இருக்கலாம்.

இவ் வரி விதிப்பை ரணில் IMF சொல்லியே செய்துள்ளார். எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் இதனையே செய்யும். வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக இவ் உண்மைகள் மறைக்கப்பட்டு மக்கள் பிழையான திசைகளின் பக்கம் வழி காட்டப்படுகிறார்கள். அரச ஊழியர்களின் சம்பளம் என்பது பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணமாகும். அது வானத்திலிருந்து விழும் ஒன்றல்ல. சம்பளத்தில் வரி அறவிடப்படுகிறதென்றால், மக்கள் வரிப்பணத்தின் ஒரு சிறிய தொகை மக்களிடமே செல்லப் போகிறது என்பதே அதன் அர்த்தம். இருப்பவனிடமிருந்து எடுத்து இல்லாதவனுக்கு கொடுத்தல் நியாயமானது தானே!

இவ் வரி விதிப்பை அரசு வலுக்கட்டாயமாக செய்தாலும், இது அரச ஊழியர்களின் ஒரு தியாகம் என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு தியாகம் செய்யும் ஒவ்வொரு ரூபாவையும் அரசு மிக கவனமாக செலவு செய்ய வேண்டும். அவ்வாறு இலங்கை அரசு செய்கிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை. அரச உயர் மட்டத்தினர் எந்த தியாகங்களும் செய்ததாக தெரியவில்லை. அவர்களின் சுக போகங்கள் குறைந்ததாகவும் தெரியவில்லை. மக்கள் தியாகம் செய்ய வேண்டியது எவ்வளவு உண்மையோ, அவசியமோ அதே அளவு அரசியல் உயர் மட்டத்தினர் மற்றும் அரசியல் வாதிகளும் தியாகம் செய்ய வேண்டும். இவற்றை நோக்கி மக்கள் போராடுவது அவசியமானது.

அரசியல் வாதிகளின் சலுகை குறைப்பை கூறி, அரசியல் செய்யும் கட்சியாக தே.ம.சக்தியை மாத்திரமே அவதானிக்க முடிகிறது என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டதக்க ஒரு விடயமாகும்.

 

 

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Previous post கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பகுதியில் முஸ்லிம்களின் குடியேற்றத் எதிர்க்கும் சிறீதரன்!
Next post மஹரகம கபூரியா அரபுக்கல்லூரி விடயத்தில் ஜனாதிபதியை தலையிடுமாறு முஸ்லிம்கள் வலியுறுத்த வேண்டும்!