
வறுமையினால் பாதிப்படைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சமுர்த்தி உணவு முத்திரை அமைச்சர் றிசாட்டினால் வழங்கி வைப்பு
(மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வறுமையினால் பாதிப்படைந்த குடும்பங்களின் மாணவர் கல்வி மேம்பாட்டிற்காக சமுர்த்தி உணவு முத்திரை பெறுகின்ற குடும்பங்களில் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு செய்கின்ற குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 233 மாணவர்களுக்கு சமுர்த்தி ”சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கும் மன்னார் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று(2013.11.04 ) மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஜந்து பிரதேச செயலகப் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இது வழங்கப்பட்டது.மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் 105 மாணவர்களும்,நானாட்டான்- 52 மாணவர்களும்,முசலி -27 மாணவர்களும்,மாந்தை மேற்கு- 27 மாணவர்களும்,மடு-22 மாணவர்களும் இன்றைய நிகழ்வில்புலமைப்பரிசில்களை பெற்றுக் கொண்டனர்.
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் நகர சபை உறுப்பினர் எம்.நகுசீன்,மேலதிக அரசாங்க அதிபர்,சமுர்த்தி உதவி ஆணையாளர்,பிரதேச செயலாளர்கள்,அமைச்சரின் இணைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.