ஸ்டார் ராசிக் சமுகம் சார்ந்த விடயங்களில் முன்னின்று செயல்பட்டவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Read Time:3 Minute, 3 Second

மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஸ்டார் ராசிக் சமூகம் சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கியதோடு, சமூக சீர்கேடுகளை சுட்டிக்காட்டுவதிலும் முன்னின்று பணியாற்றியவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

சிறிது காலம் சுகவீனமுற்றிருந்து காலமான பிரபல ஊடகவியலாளர் ஸ்டார் ராசிக்கின் மறைவு தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் அனுப்பியுள்ள அனுதாப செய்தியில் மேலும் காணப்படுவதாவது,

பொதுவாக மத்திய மலைநாட்டிலும், குறிப்பாக கண்டி மாவட்டத்திலும் இடம் பெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தமிழ்மொழிமூல ஊடகங்களுக்கு செய்திகளாகவும்,கட்டுரைகளாகவும் வழங்கியதால் அவற்றை வாசித்து அநேகர் தெளிவு பெற்றனர்.
மூத்த அரசியல்வாதி ஏ.சி.எஸ் .ஹமீதின் விருப்பத்திற்குரிய செய்தியாளராக திகழ்ந்த மர்ஹூம் ஸ்டார் ராசிக் கட்சி வேறுபாடின்றி நடுநிலைத் தன்மையை பேணி செய்திகளை அறிக்கையிடுவதிலும், நேரந்தவறாமல் நிகழ்வுகளிலும், சம்பவங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களிலும் பிரசன்னமாகி இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அரசியல்,சமூக ரீதியாக கண்டி மாவட்டத்தில் நான் கலந்துகொண்ட பல்வேறு நிகழ்வுகளில் நண்பர் ராசிக் ஒரு பத்திரிகையாளராக பங்குபற்றி சுடச்சுட செய்திகளை தமிழ் அச்சு ஊடகங்களுக்கு வழங்கியதோடு அவரது சிங்கள,ஆங்கில ஊடக நண்பர்களோடும் அவற்றை பகிர்ந்து கொள்வதில் அதிக கரிசனை காட்டி வந்தார். மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் சுபாவத்தை உடையவராக இருந்த அவர், பழகுவதற்கு இனிமையானவராக விளங்கினார்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வததோடு, அவருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வு கிட்டவும் பிரார்த்திக்கின்றேன்.

Previous post பசில் பிணையில்
Next post கிண்ணியா டெங்கு விவகாகரம்: கூலித்தொழிலாளர்கள் சிக்குவதாகவும் செல்வந்தர்கள் தப்பிப்பதாகவும் மக்கள் விசனம்