12 வயதில் திருமணம் 13 வயதில் கர்ப்பம்: மலைக்கிராம மக்களின் ஸ்பெஷல் வாழ்க்கை - Sri Lanka Muslim

12 வயதில் திருமணம் 13 வயதில் கர்ப்பம்: மலைக்கிராம மக்களின் ஸ்பெஷல் வாழ்க்கை

Contributors

தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ண கிரி, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது.
பட்டியலில் இடம்பெறாத ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக சொல்லும் சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியளித்துள்ளது.

ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மலைக்கிராமங்களில் உள்ள 1000 குடும்பங்களை ஆய்வு செய்தனர். இதில் 80 சதவீத குடும்பங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்குத் திருமணம் நடப்பது அம்பலமானது.

இதுகுறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜன் கூறுகையில், எங்கள் அமைப்பு சார்பில், பர்கூரை அடுத்த கொங்காடை மலைப்பகுதியில் உண்டு உறை விடப் பள்ளி நடத்தி வருகிறோம். இங்கு ஆறாவது படித்து வந்த மாணவி சுமதிக்கு திடீரென திருமணம் நடந்தது. கடைசி நேரத்தில் தகவல் தெரிந்ததால் தடுக்க முடியவில்லை.

இதுபோல பள்ளியில் சமையல் பணி பார்க்கும் ஒருவர் புள்ள அத்துகிட்டு வந்திடுச்சுங்க, பணத்தைத் திரும்ப கொடுக்கணும். 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றார்.

11 வயதான அவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞரை திருமணம் செய்த அந்த சிறுமி, முதல் இரவன்று பயந்துபோய் தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார். இதனால் திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் வாங்கிய தொகையை திருப்பித்தர பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதனை விசாரித்தபோதுதான், மலைக்கிராமங்களில் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடப்பது தெரியவந்தது. 12 வயதில் திருமணம், 13 வயதில் கர்ப்பம், 14 வயதில் பிரசவிக்க தேவையான உடல், மனரீதியான பக்குவம் இல்லாமல் மரணமடையும் சம்பவங்கள் சர்வசாதாரணமாய் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், தாளவாடி, கடம்பூர் வனப்பகுதி களில் அதிகம் வசிக்கும் லிங்காயத்து, ஊராளி, சோளகர் ஆகிய பிரிவினர் அதிக அளவில் குழந்தைத் திருமணங்களை நடத்திவருவது தெரியவந்துள்ளது.

மேலும் மலைவாழ் குழந்தைகள் கல்வி கற்கப் போதுமான பள்ளிகள் இல்லாததுதான் இந்த அவலம் அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள ஒருசில பள்ளிகள் 8ம் வகுப்பு வரைக்கும் மட்டுமே உள்ளது. தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் வீட்டில் தனியாக பெண் குழந்தையை விட்டுச் செல்ல பயந்து 13, 14 வயதுள்ள பெண்களை 20 முதல் 40 வயது வரை உள்ள மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

மலைக் கிராமம் மட்டுமல்லாது, ஈரோடு நகர் பகுதிகளிலும் தற்போது குழந்தை திருமணங்கள், விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதைத் தடுக்கும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபடுவ தில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

மேலும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சியாமளாவைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் அவருடைய விளக்கத்தைப் பெற முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team