நேற்று ஐக்கிய நாடுகள் தினம் - Sri Lanka Muslim
Contributors

ஐக்கிய நாடுகள், அல்லது ஐ.நா அல்லது யூஎன், என்பது, நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து ஒக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது.

ஐ.நா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா சமாதான விரும்பி� நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படி, 192 உறுப்புநாடுகள் இருந்தன. சூலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐநா தினத்தை முன்னிட்டு செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்துள்ள செய்தி வருமாறு, ஐக்கியநாடுகள் தினம் என்பது ஐநா என்ற விலைமதிப்பற்ற ஸ்தாபனம் சமாதானத்திற்கும் பொதுவான முன்னேற்றத்திற்கும் எவ்வளவு பங்களிப்பை நல்குகிறது என்பதை புரிந்து கொள்வதற்குரிய வாய்ப்பாகும்.

சிறந்ததொரு உலகம் என்பதற்கான எமது தொலைநோக்கை யதார்த்தமானதாக மாற்றுவதற்கு நாம் இன்னும் கூடுதலாக என்ன செய்யலாம் என்பதைப் பிரதிபலிக்கக்கூடிய தருணமாகவும் இது அமைந்துள்ளது. சிரியாவின் மோதல் எமது மிகப்பெரிய பாதுகாப்பு சவாலாகத் திகழ்கிறது. இலட்சக்கணக்கான மக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான உதவிகளுக்காக ஐநா மனிதநேயப் பணியாளர்களில் தங்கியிருக்கிறார்கள். சிரியாவில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இரசாயன ஆயுதங்களை நிர்மூலமாக்குவதற்காக நொபெல் சமாதான பரிசு வென்ற இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்குரிய ஸ்தாபனத்துடன் ஐநா நிபுணர்கள் தோளோடுதோள் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.

இங்கு வெகுதொலைவுவரை நீடித்துள்ள அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இராஜதந்திர தீர்வை வலியுறுத்தி வருகிறோம். எமது சமகால அபிவிருத்தி சவாலாக அமைவது நிலைபேற்றினை யதார்த்தபூர்வமானதாக மாற்றுதலாகும். மில்லேனிய அபிவிருத்தி இலக்குகள் வறுமையை பாதியாகக் குறைத்துள்ளன. இதற்குரிய உத்வேகத்தைத் தொடர்ந்து பேணி, 2015இற்கு பிந்திய காலப்பகுதிக்காக இதற்கு சமமானதொரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, சுவாத்தியமாற்றம் தொடர்பான உடன்பாட்டை எட்ட வேண்டியது அவசியமாகிறது. ஆயுத நெருக்கடி, மனித உரிமைகள், சுற்றாடல் முதலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஒன்றுபட்டதை இவ்வாண்டிலும் நாம் காணக் கூடியதாக இருந்தது.

கூட்டு நடவடிக்கையால் எந்தளவு சாதிக்க முடியும் என்பதை நாம் தொடர்ந்து நிரூபித்துக் காட்டிவருகிறோம். எம்மால் இதனைவிடவும் சாதிக்கமுடியும். உலகம் ஆகக்கூடுதலாக ஒன்றுடனொன்று தொடர்புபட்டதாக காணப்படுகிறது. நாம் கூடுதலாக ஐக்கியப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் தினத்தன்று, அதனை ஸ்தாபிப்பதற்கு அடித்தளமாகத் திகழ்ந்த கோட்பாடுகளை அனுசரித்து நடப்பதற்கும், சமாதானம், அபிவிருத்தி, மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக ஒன்றாக பாடுபடுவதற்கும் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம். இவ்வாறு ஐக்கியநாடுகள் தினத்திற்குரிய செய்தியில் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team