17 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு கிடைக்காத மருதமுனை சுனாமி வீடுகள்! - Sri Lanka Muslim

17 ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு கிடைக்காத மருதமுனை சுனாமி வீடுகள்!

Contributors

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக கட்டப்பட்ட வீட்டுத் திட்டமே மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டமாகும். கடற்கரையிலிருந்து 65 மீட்டர் எல்லைக்குள் குடியிருந்து இருப்பிடங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கிராமத்தின் மேற்குப் புறமாக கிடந்த மேட்டுவட்டை காணியில் தேசிய வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் 186 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன் நிர்மாண வேலைகள் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. அப்போது 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு வீடுகள் வழங்கப்படும் என அப்போதைய மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

எனினும் பல்வேறு மக்கள் போராட்டங்கள், தடைகள் என நீதிமன்றம் வரை சென்றதால் முதற்கட்டமாக 2012 ஆம் ஆண்டு 50 வீடுகள் கையளிக்கப்பட்டன. 178 வீடுகளில் இதுவரை நூறு வீடுகள் மாத்திரமே மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. மீதமாக உள்ள 78 வீடுகளும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 17 ஆண்டுகள் தாண்டியும் இதுவரை மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. காலத்துக்குக் காலம் வரும் அரசியல் தலைவர்களால் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் மக்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் குறித்த 78 வீடுகளும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன.

சுனாமி அனர்த்தத்தின் போது கருவறையிலிருந்த பிள்ளைகள் இன்று இந்த கல்வீடு தமக்குக் கிடைக்காதா? என்று காத்திருந்து காத்திருந்து காலத்தைக் கடத்தி வருகின்றனர். இன்னும் வாடகை வீடுகளில் சிலர் வாழ்ந்து வருகின்றனர். இளைஞர்கள் பலர் மறைந்திருந்து போதைவஸ்து பாவிக்கும் இடமாகவும் அருகில் வசிப்பவர்களுக்கு தொல்லை தரும் இடமாகவும் இந்த வீட்டுத் திட்டம் மாறியுள்ளது.

கிராமத்தின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வரும் இந்த வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று கடந்த 17 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இந்த வீட்டுத் திட்டத்தை அண்மித்த பகுதிகளில் குடியேறிய மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 17 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள இவ்வேளையில் இம்மக்கள் குறித்த இந்த 78 வீடுகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வராது இருப்பது ஏன்? என கேள்வி எழுப்புகின்றனர். விரைவில் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

ஏ.எல்.எம். ஷினாஸ்

Web Design by Srilanka Muslims Web Team