நாளை சந்திர கிரகணம் – ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை!

Read Time:3 Minute, 30 Second

ஹிஜ்ரி : 1444.04.10 (2022.11.06)

சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தருமம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி – 1044)

சூரியன் அல்லது சந்திரன் முழுமையாக அல்லது அவற்றில் ஒரு பகுதி மறைவதைக் காணும் போதுதான் கிரகணத் தொழுகை, துஆ, இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற இபாதத்துக்கள் சுன்னத்தாகும். கிரகணம் ஏற்பட்டுள்ளது என உறுதியானதன் பின்னர் கிரகணத் தொழுகையை அதனது முறைப்பிரகாரம் தொழ ஆரம்பிக்கும் போது மீதமாக இருக்கும் நேரம் அதனைப் பூர்த்தி செய்யப் போதாதெனில் கிரகணத் தொழுகையை அதனது முறைப்பிரகாரம் தொழ ஆரம்பிக்காமல் ளுஹ்ருடைய ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துளகளைப் போன்று இரண்டு ரக்அத்களைத் தொழுதுகொள்ளல் வேண்டும்.

எதிர்வரும் 08.11.2022 செவ்வாய்க்கிழமை இன்ஷா அல்லாஹ் சந்திர கிரகணம் (Lunar Eclipse) ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறித்த கிரகணம் உலகில் பல பாகங்களுக்கு பூரண கிரகணமாகவும் இலங்கைக்கு பகுதி கிரகணமாகவும் ஏற்படவுள்ளதாக அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இலங்கை நேரப்படி அன்றைய தினம் பி.ப. 01:32 முதல் மாலை 07:26 வரை ஏற்படவுள்ளதாகவும் இலங்கைக்கு மாலை 05:57 முதல் மாலை 07:26 வரையான காலப் பகுதிக்குள் மாலை 05:57 முதல் மாலை 06:19 வரை பகுதி கிரகணமாகவும் மிகுதி நேரத்தில் அயல்நிழல் கிரகணமாகவும் ஏற்படவுள்ளதாக குறித்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனவே, மாலை 05:57 முதல் மாலை 06:19 வரையான காலப்பகுதிக்குள் பகுதி கிரகணம் ஏற்படுவதைக் காணும் போது அல்லது ஏற்பட்டமை உறுதியாகும் போது கிரகணத் தொழுகை, துஆ, இஸ்திஃபார் மற்றும் ஸதகா போன்ற ஸுன்னத்தான இபாதத்துக்களில் தமது பகுதி மக்கள் ஈடுபடும் விடயத்தில் மஸ்ஜித் இமாம்கள., அப்பகுதி ஆலிம்கள், மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாக் குழு கேட்டுக் கொள்கின்றது.

அஷ்ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான்
பதில் செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Previous post “அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி உங்கள் பலவீனத்தைக் காட்டாதீர்” – தினேஷ் குணவர்தன! 
Next post மொட்டுக்குள் கடும் மோதல்!