1983இன் பின் நாட்டிலிருந்து சென்ற அரச உத்தியோகத்தர் நீங்களா? இது உங்களுக்கான சந்தர்ப்பம்! - Sri Lanka Muslim

1983இன் பின் நாட்டிலிருந்து சென்ற அரச உத்தியோகத்தர் நீங்களா? இது உங்களுக்கான சந்தர்ப்பம்!

Contributors

1983ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அரசாங்க, உள்ளுராட்சி, கூட்டுத்தாபன ஊழியர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கான இறுதித் திகதி டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் பொதுநிர்வாக உள்ளுநாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை சந்தித்து விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொன்.செல்வராசா,

1983ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அரசாங்க, உள்ளுராட்சி, கூட்டுத்தாபன ஊழியர்களை மீண்டும் வேலையில் இணைத்துக் கொள்வது என 4/2006 சுற்றுப்பிரகாரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி 2013ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கால எல்லையினை நீடித்து தாருங்கள் என்ற கோரிக்கையினை முன்வைத்தேன்.

இந்த நாட்டில் 2009ஆண்டு மே மாதம் போர் முடிவுறுவதற்கு முன்னர், வெளிநாடு சென்று வேலையற்று இருந்த அரசாங்க ஊழியர்கள் தமது தொழிலை மீண்டும் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வந்தனர்.

இது தொடர்பில் 2009ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் நாடு திரும்பியவர்கள் என்னை சந்தித்து தங்களது தொழிலை மீண்டும் பெற்றுத்தருமாறு கோரியதையும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.

எனினும் அமைச்சர் இது தொடர்பில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதன் அனுமதியுடன் கால நீடிப்பினை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

இதன்படி 03-10-2013 நடைபெற்ற அமைச்சரவையில் தன்னால் கால நீடிப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எனக்கு தெரியப்படுத்தினார்.

இது தொடர்பான சுற்று நிருபங்கள் அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கூட்டுத்தாபன தலைவர்கள் ஆகியோருக்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையெழுத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த கால நீடிப்பு காரணமாக ஆயிரக்கணக்கானோர் மீண்டும் தமது தொழிலை பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலை இழந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்குமாறும் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

அத தெரண

Web Design by Srilanka Muslims Web Team