2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படும் "கிராமத்துடன் உரையாடல்" வேலைத்திட்டம் ஆரம்பம்..! - Sri Lanka Muslim

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படும் “கிராமத்துடன் உரையாடல்” வேலைத்திட்டம் ஆரம்பம்..!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

நூருள் ஹுதா உமர், சர்ஜுன். லாபீர்.

வரவுசெலவுத்திட்டம் 2022 இற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற “கிராமத்துடன் உரையாடல்” கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை செயற்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் என்பற்றைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களினூடாக முழு வேலைத்திட்டத்தையும் முன்னுரிமை வேலைத்திட்டமாக செயற்படுத்துவதற்கான சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான ஆரம்பகட்ட கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸீக் தலைமையில் இன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

“கிராமத்துடன் உரையாடல்” கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டதோடு இவ்வேலைத்திட்டம் தொடர்பிலான சிறப்புரையாற்றினர்.

சிறப்பு அதிதியாக தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம் சலீம் கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டம் பற்றிய விளக்க உரையும் வழங்கப்பட்டது.

பிரதேச செயலக மட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் தொழில் முயற்சியாண்மைகளை உருவாக்குவது பற்றியும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ ஹமீட்டினால் விளக்க உரை வழங்கப்பட்டது.

தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய் நிலையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள குறுகிய கால சவால்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் கிராமிய மக்களின் சிதைக்கப்பட்டுள்ள வாழ்வாதாரங்களை புத்துயிர் அளித்து கிராமிய உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதனூடாகத் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இவ்வேலைத்திட்டத்தின் முதன்மையான தேவையாகும்.

மேலும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு வசதிகள், வீதிகள் என்பவற்றை உடனடியாக சீரமைத்து பிராந்திய ரீதியிலான புத்தெழுச்சியை கட்டியெழுப்புவதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது.

01. வாழ்வாதார அபிவிருத்தி – 40%

02. பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி – 40%

03. சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்தி – 10%

04. சமூக நலன் மற்றும் சமூக அபிவிருத்தி – 10%

மேற்படி நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் “கிராமத்துடனான உரையாடல்” ஆரம்ப கட்ட கலந்துரையாடல் மூலம் கருத்திட்டங்கள் பெறப்பட்டு 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.

மேற்படி இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏ அஸீஸ், கணக்காளர் ஏ.ஜே நுஸ்ரத் பானு, சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ பளிழ், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பீ.எம் அஸ்ஹர், பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா, இணைப்பாளர் சப்றாஸ் நிலாம், உட்பட சிவில் சமூக பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team