2023 பட்ஜட்: 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! - Sri Lanka Muslim

2023 பட்ஜட்: 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Contributors

2023 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று  (22) பிற்பகல் இடம்பெற்ற நிலையில் அதற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சி உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியுடன் இணைந்த மற்றும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்திருந்த உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தனர்.

ஶ்ரீ.ல.சு.க. உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர பலர் இதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இ.தொ.கா. உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், எம். ராமேஷ்வரன் ஆகியோரும், தேசிய காங்கிரஸ் எம்.பியானா அதாவுல்லாஹ் உள்ளிட்டோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

சீ.வி. விக்னேஸ்வரன் வாக்கெடுப்பை தவிர்ப்பதாக பதிவு செய்திருந்தார்.

அதற்கமைய 3ஆவது வாசிப்பு இன்று  (23) முதல் எதிர்வரும் டிசம்பர் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான ஆரம்ப உரையை (வரவுசெலவுத்திட்ட உரை) ஜனாதிபதியும், நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க கடந்த நவம்பர் 14ஆம் திகதி மு.ப.  1.30 மணிக்குப் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

அதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகி இன்று வரை இடம்பெற்றது.

இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் தினமும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரையும் நடைபெற்றதுடன், அதன் பின்னர் பி.ப. 5.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரையான காலப் பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி அல்லது சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடரந்து இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நேற்று  (22) பிற்பகல் நடத்தப்பட்டது.

இதன் பின்னர் ஒதுக்கீட்டுச் சட்டுமூலம் மீதான குழுநிலை விவாதம் இன்று (23) ஆரம்பிக்கவிருப்பதுடன் இது டிசம்பர் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதன் மீதான விவாதம் தினமும் மு.ப. 9.30 மணி முதல்  பி.ப. 7.00 மணி வரை நடைபெறும்.இதன் மீதான  வாக்கெடுப்பு டிசம்பர் 08ஆம் திகதி பி.ப. 7.00 மணிக்கு நடைபெறும்.

இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 08ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தகக்கது.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team